சிவகாசியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலை
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மங்கலத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மணி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.சிவகாசி அருக விளாம்பட்டி காமராஜபுரம் காலனியைச் சேர்ந்த தமிழரசன் 32, முத்துக்குமார் 31, அஜித்குமார் 29, முத்துப்பாண்டி 26, திருத்தங்கல் பெரியார் காலனி காளீஸ்வரன் 24, ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே மங்கலம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் தமிழரசனுக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தினர். டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஐ., சிராஜுதீன், போலீசார் நேரில் சென்று பார்த்த போது, மிகப்பெரிய தகர செட் அமைத்து தொழிலாளர்களை வைத்து பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 45 கிலோ துாக்கு மணி மருந்து, 40 கிலோ கலர் மணி மருந்து, 30 கிலோ வெடி உப்பு, கார் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.பொதுவாக சிவகாசி பகுதியில் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே அவ்வப்போது சட்டவிரோதமாக மரத்தடியிலும், சிறிய தகர செட் அமைத்தும் பட்டாசு தயாரிப்பர். இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர். இங்கு பெரிய அளவில் பட்டாசுகளோ மணி மருந்துகளோ இருக்காது. ஆனால் இங்கு அரசு அனுமதி பெற்ற பட்டாசு ஆலை போலவே மிகப்பெரிய தகர செட், வேலி அமைத்து உள்ளே பட்டாசு தயாரித்துள்ளனர். இதனால் போலீசார், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.டி.எஸ்.பி., கூறுகையில் சட்டவிரோதமாக காட்டுப்பகுதிகளில் பட்டாசு தயாரிப்பது மிகப்பெரிய குற்றம். இது குறித்து மக்களுக்கு தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.