ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 32வது வார்டில் துார் வாராத வாறுகால், முழுமை பெறாத பாதாள சாக்கடை இணைப்பு பணி, பயன்பாடில்லாத மகளிர் சுகாதார வளாகம் என பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஆண்டத்தம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, முத்தன் தெரு, நேதாஜி தெரு கோதண்ட ராமர் கோயில் தெரு உள்ள இவ்வார்டில் சில பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு முழுமையாக இணைப்பு வழங்கப்படவில்லை.தோண்டப்பட்டு ரோடுகளும் சந்துகளில் புதிதாக போடாமல் மேடு பள்ளமாக உள்ளது. மெயின் ரோட்டை கடந்து மகளிர் சுகாதார வளாகத்திற்கு செல்வது முக்கிய பிரச்சினையாக உள்ளது. மங்காபுரம் பகுதியில் அமைந்துள்ள மகளிர் சுகாதார வளாகம் தண்ணீர் பிரச்சனையால் பயன்பாடின்றி உள்ளது. ஏற்கனவே உள்ள ரோட்டினை தோண்டி புதிய ரோடு போடாததால் வீடுகள் தாழ்ந்து கழிவுநீர் புகுந்து விடுகிறது.நேதாஜி தெரு பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் குறைவாக வருகிறது. வாறுகால் கழிவுகள் முழுமையாக அகற்றப்படாததால் கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. தெரு நாய்களால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வேர்களால் பாதிப்பு
நந்தினி, குடியிருப்பாளர்: நேதாஜி ரோடு அங்கன்வாடி மையம் அருகே உள்ள விநாயகர் கோயில் ஒட்டி வளர்ந்துள்ள 50 ஆண்டுகளான அரசமரத்தின் வேர்கள் சுற்றியுள்ள குடியிருப்புகளின் சுவர்களையும் குடி நீர் தொட்டிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அகற்ற கோரிக்கை வைத்துள்ளோம். சுகாதாரக் கேடு
செல்ல பாண்டியன், குடியிருப்பாளர்: குடியிருப்புகள் இடையே பல பகுதிகளில் சாக்கடை மண்மேவியும் குப்பையும் சேர்ந்து கழிவுகளுடன் சாக்கடை தேங்கி பாதிக்கிறது. இவற்றில் நமக்கு நாமே என்பது போல பணியாளர்களை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்க வேண்டியுள்ளது. புழு உற்பத்தியாவதால் சுகாதாரத்தை எதிர்பார்க்கிறோம். தடுமாறும் வாகனங்கள்
சுரேஷ், குடியிருப்பாளர்: கோதண்டராமர் கோயில் ஒட்டிய தெருவில் மெயின் ரோட்டிற்கு செல்லும் சாக்கடை தரைப்பாலம் ரோட்டை விட அதிகமாக உயர்த்தியதால் சிறிய வாகனங்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. வீட்டை ஒட்டியுள்ள காலி இடத்தில் கழிவுகள் கொட்டி வருவதை தடுக்க வேண்டும். புதரால் அச்சம்
இசக்கிமுத்து, குடியிருப்பாளர்: மங்காபுரம் தெரு, உப்பு கிணறு பகுதி மந்தையில் புதர் மண்டி கிடக்கிறது. இவற்றை அகற்ற கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. விஷ ஜந்துக்கள் பதுங்குவதற்கு தோதாக உள்ளதுடன் பகல் நேரங்களில் இதனால் கொசுக்கடிக்கு ஆளாகி வருகிறோம். சுகாதாரமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.