சாவியாகிய மக்காச்சோளம் வீரிய விதையால் இழப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வேளாண்துறை அலுவலகத்தில் வாங்கிய வீரியமிக்க சோள விதை காரணமாக அதிக சோள கதிர்கள் விளைந்து மணி பிடிக்காமல் சாவியாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி புகார் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் அருகே முத்தாநதி கிராமத்தைச் சேர்ந்த வள்ளி விநாயகம். கடந்த ஆண்டு பயறு வகைகளை விவசாயம் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி 4 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டார்.தொடக்கத்தில் பயிர்கள் வளர்ச்சி வேகமாக இருந்து அறுவடை காலம் வரும்போது ஒரு தட்டை சோளத்திற்கு வழக்கமாக ஒரு கதிர் மட்டும் இருக்க வேண்டிய நிலையில் 7 முதல் 8 சோளக்கதிர்கள் வளர்ந்தது. இருப்பினும் அறுவடை பருவத்தில் கதிர்களில் சோழ மணிகள் வளர்ச்சி இல்லாமல் சாவியாக இருந்ததால் வேளாண் துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். நேரில் வந்து பார்வையிட்ட அதிகாரிகள் இழப்பீடு வழங்கப்படும் என கூறிச் சென்று ஒரு மாதம் கடந்தும் அலைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வள்ளி விநாயகம்: வேளாண் அதிகாரிகளின் அறிவுரைப்படி தொடக்கத்தில் வீரிய விதைகளால் மகசூல் அதிகரிக்கும் என நம்பி 4 ஏக்கரில் பயிர் இட்டேன். ஒரே சோள தட்டில் அதிக கதிர்கள் வெளியானது. அறுவடை சமயத்தில் சோள மணிகள் மேனி பிடிக்கும் என காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் பார்த்துச் சென்றும் நடவடிக்கை இல்லை.