| ADDED : ஜூன் 22, 2024 04:40 AM
விருதுநகர்: விருதுநகரில் புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே பீடர் ரோடு, புல்லலக்கோட்டை ரோடுகளில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்களை உயர்த்தாததால் பள்ளங்களாகி சைக்கிள், டூவீலர்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.விருதுநகரில் பள்ளங்களால் நிறைந்திருந்த ரயில்வே பீடர் ரோடு, புல்லலக்கோட்டை ரோடு புதியதாக அமைக்கப்பட்டது. இதில் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனைக்கு தினமும் டூவீலர், ஆட்டோ, காரில் செல்ல ரயில்வே பீடர் ரோட்டை பயன்படுத்துகின்றனர்.அதே போல சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சாத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து விருதுநகர் வழியாக மதுரைக்கு செல்லும் வாகனங்கள் புல்லலக்கோட்டை ரோடு வழியாக செல்கின்றனர். இந்நிலையில் இந்த இரு ரோடுகளிலும் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் ரோட்டின் உயரம் அதிகரித்ததற்கு ஏற்றாற் போல சீரமைக்கப்படவில்லை.இதனால் மேன்ஹோல்கள் ரோட்டின் பள்ளங்களாக மாறியுள்ளது. இந்த பள்ளத்தை கவனிக்காமல் அவ்வழியாக சைக்கிகள், டூவீலரில் வருபவர்கள் விழுந்து விபத்துக்குள்ளாகி காயமடைந்து வருகின்றனர். மேலும் ரோடு அமைக்கும் போதே உயரம் கூடுதலாக அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.எனவே தற்போது ரயில்வே பீடர் ரோடு, புல்லலக்கோட்டை ரோட்டில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்களை ரோட்டின் உயரத்திற்கு ஏற்றவாறு சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.