எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிகள்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்
விருதுநகர் : விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலை வழியாகத்தான் புது பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்கின்றன. இவ்வழியில் நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டை செயல்படுத்தும் முன் எம்.ஜி.ஆர்., சாலை ரோட்டை அகல படுத்த பக்கவாட்டுகளில் தோண்டப்பட்டது.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது வரை பக்கவாட்டில் புதிய ரோடு போடப்படவில்லை. இந்நிலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் ரோடு வரை பரப்பிய நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவ்வழியாக வரும் டூவீலர் வாகன ஓட்டிகள் ஜல்லி கற்கள் மீது ஓட்டி விபத்திற்குள்ளாகின்றனர். வளைவில் இது போன்ற நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி தான் திருப்புகின்றனர். இதை அகற்றி ஜல்லிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.