| ADDED : ஜூன் 18, 2024 06:57 AM
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், அதனை கொள்முதல் செய்வதில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்தாண்டு நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக அணைகள், கண்மாய்களில் விவசாயத்திற்குதேவையான அளவு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிலை ஏற்பட்டது.இதனால் வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம், தாணிப்பாறை, மகாராஜபுரம், கோட்டையூர், புதுப்பட்டி சுந்தரபாண்டியம் பகுதி விவசாயிகள், அதிக பரப்பளவில் கோடை நெல் பயிரிட்டனர். இதனால் நெல் விளைச்சல் நன்றாக இருந்தது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரம் முதல் படிப்படியாக நெல் அறுவடை துவங்கியது. இதனையடுத்து நெல் விளைச்சல் ஏற்பட்ட வயல்களில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக நெல் அறுவடை நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான வயல்களில் அறுவடை முடிந்து நிறைவடையும் தருவாயில் உள்ளது.இதனையடுத்து உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் நேரடி கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், அறுவடையின் போது கிடைத்த வைக்கோல்களையும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.