| ADDED : ஜூலை 03, 2024 05:32 AM
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வில் மாவுக் கல்லால் ஆன தொங்கணி கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள், வட்ட சில்லு, அகல் விளக்கு, எலும்புகள் என 250 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாவுக் கல்லால் ஆன கூம்பு வடிவிலான தொங்கணி ( பெண்கள் கழுத்தில் அணிய கூடிய ஆபரணம்) கண்டெடுக்கப்பட்டது.அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ''விஜயகரிசல்குளம் அகழாய்வில் 14.6 மில்லி மீட்டர் நீளம், 4.2 மில்லி மீட்டர் சுற்றளவு, 30 மில்லி கிராம் எடை கொண்ட பச்சை நிறத்தில் கூம்பு வடிவிலான சிறிய அணிகலன் கண்டெடுக்கப்பட்டது,'' என்றார்.