உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழைக்காலங்களில் வீடுகளை சூழும் மழை நீர்

மழைக்காலங்களில் வீடுகளை சூழும் மழை நீர்

அருப்புக்கோட்டை: மழை நீர் வடிகால் இல்லாததால் வீடுகளை சூழும் மழை நீர், சேதமான ரோடுகள், சமுதாய கூடம், குளியல் தொட்டி போன்றவற்றால் அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி ஆதி திராவிட காலனியில் பல ஆண்டுகளாக மக்கள் அல்லல் பட்டு வருகின்றனர்.அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி ஆதி திராவிடர் காலனி உருவாகி பல ஆண்டுகள் ஆன போதிலும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. காலனியில் வாறுகால் வசதி இல்லை. பிரதான வாறுகால் இல்லாததால் மழை காலத்தில் காட்டுப் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் செல்ல வழியின்றி காலனிக்குள் புகுந்து விடுகிறது.மழைக்காலத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. தெருக்களில் வாறுகாலின்றி கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கொசு தொல்லை தாங்க முடியவில்லை. கொசு மருந்து அடிப்பதும் இல்லை. வடக்கு தெருவில் 2022ல், பேவர் பிளாக் கற்கள் அரைகுறையாக பதிக்கப்பட்டதால், தற்போது அவை ஒவ்வொன்றாக கழன்று வருகிறது. காலனிக்கு வரும் மெயின் ரோடு கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத அளவிற்கு உள்ளது.காலனியில் பொது கழிப்பறை இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வீடுகள் தோறும் கட்டப்பட்ட கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இங்குள்ள சமுதாயக்கூடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலை சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காலனியில் கட்டப்பட்ட குளியல் தொட்டி தண்ணீர் வெளியேற வசதி இல்லாததால் தொட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.தெரு விளக்கு வசதி இல்லை. ஊராட்சி நிர்வாகம் காலனிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் மெத்தனம் காட்டுகிறது. . இதே நிலை தொடர்ந்தால் மக்கள் காலனியை காலி செய்து விட்டு போக வேண்டிய நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !