| ADDED : ஜூலை 02, 2024 06:28 AM
சிவகாசி : சேதமான ரோடு , துார்வாராத ஓடை, வாறுகால் என சிவகாசி விளாம்பட்டி ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் பகுதியில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராதது முக்கிய பிரச்னையாக உள்ளது. விளாம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்கள் உள்ளன. இதன் வழியாக அப்பகுதியினருக்கு உயர் அழுத்த மின்சாரம் வினியோகம் வழங்கப்படுகிறது. இங்கு ஒரு சில மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சிமெண்ட் பெயர்ந்து கீழிருந்து உச்சி வரை கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. போக்குவரத்து நிறைந்த ரோட்டின் ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். விளாம்பட்டி செல்லும் ரோட்டில் ஒரு கி. மீ., துாரத்திற்கு இருபுறமும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வாறுகால் ரோட்டின் இரு புறமுமே பெரும்பான்மையான இடங்களில் சேதம் அடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் செடிகள் முளைத்து துார்ந்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் அடைபட்டும் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் வாறுகாலில் செல்லாமல் வெளியேறி ரோட்டில் ஓடி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்துகிறது.மேலும் இப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய் கரையில் குப்பைகொட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது. புற்களை அகற்றவும்
டேனியல், சமூக ஆர்வலர்: சிவகாசி விளாம்பட்டி ரோடு மாலையம்மன் கோயில் அருகே காலங்கரை உள்ளது. ஆரம்ப காலங்களில் இப்பகுதியில் விவசாயம் நடைபெறும் போது காலாங்கரையின் வழியாக வந்த தண்ணீரை பயன்படுத்தினர். நாளடைவில் விவசாய நிலங்கள் வீட்டுமனையாக மாறிய பின்னர் காலாங்கரை கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் தற்சமயம் காலாங்கரை முழுவதுமே கோரைப் புற்கள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் வர வழி இல்லை. எனவே கோரைப் புற்களை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் சிரமம்
பாண்டியன், இளநீர் வியாபாரி: விளாம்பட்டி செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாக செல்கின்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர இவ்வழியே செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்துள்ள இடங்களில் ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.