உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கு வேகமெடுக்கும் ரோடு விரிவாக்க பணி திட்ட அலுவலக கட்டுமான  பணியும் ஜரூர்

மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கு வேகமெடுக்கும் ரோடு விரிவாக்க பணி திட்ட அலுவலக கட்டுமான  பணியும் ஜரூர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான இ.குமாரலிங்கபுரம் வரையிலான ரோடு விரிவாக்க பணி, திட்ட அலுவலகம் கட்டும் பணி வேகம் எடுத்துள்ளது.இந்தியா முழுவதும் தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் நிலத்தில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதை மார்ச் 22ல் முதல்வர் ஸ்டாலின், மத்திய வர்த்தகம், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைெயழுத்திடப்பட்டன. 1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.2 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்துகிறது.இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது. மாநில அரசு ஆர்வம் கொண்டு பகுதி 2 ஆக கூடுதலாக 500 ஏக்கர் ஒதுக்கி உள்ளது.2 லட்சம் பேர் வேலை பெற உள்ளனர்.ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது.இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டர் அகலத்திற்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. 5 பாலங்கள் அமைகின்றன. 1.8 கி.மீ., வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 200 மீட்டருக்கு இருவழிச்சாலையாக போடப்பட உள்ளது.முதற்கட்டமாக பாலங்கள் கட்டப்பட்டு மண் கொட்டி அதை சமன்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சிப்காட் திட்ட அலுவலகம் கட்டும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையோடு அகலப்படுத்தப்பட்ட ரோடு இணையும் இடத்தில் பெரிய அளவில் சந்திப்பு ரவுண்டானா அமைய உள்ளது.11 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதல் கட்டத்தில் அமைய உள்ள ஆலைகள் மூலம் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த கட்டங்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி வேலைவாய்ப்புகள் பெருகும்.இது விருதுநகர் மாவட்ட மத்திய பகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. குமாரலிங்கபுரம், எட்டூர்வட்டம், நடுவப்பட்டி, முத்துலிங்காபுரம், வாடியூர் பகுதி மக்கள் பட்டாசு தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்களில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு இந்த ஜவுளி பூங்கா அருமருந்தாக அமைவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பயன்பெறும் கிராமங்கள்

மணிப்பாரைப்பட்டி, துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், கன்னிச்சேரி, தம்மநாயக்கன்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூர், சின்னையாபுரம், முதலிபட்டி, தியாகராஜபுரம், சங்கரலிங்கபுரம், வி.முத்துலிங்காபுரம், நடுவபட்டி, வேப்பிலைப்பட்டி, முத்துலாபுரம், மணியம்பட்டி, கோல்வார்பட்டி, மேட்டமலை, வாடியூர், ராமலிங்காபுரம், சுந்தராஜபுரம், எட்டூர்வட்டம் உள்ளிட்ட 30 கிராமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ