அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே அமிர்தபுரம் காலனியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 1 வது வார்டுக்குட்பட்டது அமிர்தபுரம் காலனி. இதில் 5 தெருக்கள் உள்ளன. காலனி உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அடிப்படை வசதிகள் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு, நகராட்சி மூலம் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பறை இடியும் நிலையில் உள்ளது.இதே போன்று அருகில் உள்ள ஆண்கள் கழிப்பறையும் உள்ளது. விருதுநகர் ரோட்டிலிருந்து காலனிக்கு செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து மேடும், பள்ளமுமாக உள்ளது. நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு சில தெருக்களில் ரோடு வசதி இல்லை. நகராட்சி மூலம் 2 பொது குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளது. இவற்றில் தண்ணீர் வராமல் காட்சி பொருளாக உள்ளது. குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.பொது அடிகுழாயும் பழுதாக உள்ளது. நன்கு தண்ணீர் வந்த குழாயை பராமரிப்பு என்ற பெயரில் எடுத்து சென்று விட்டனர். காலனியில் வாறுகால் வசதி இல்லை. வீடுகளின் கழிவுநீர் திறந்த வெளிகளில் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. தூய்மை பணியாளர்கள் இந்த பக்கம் வருவதே இல்லை. காலனி முழுவதும் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், பாம்புகள், விஷ பூச்சிகள் சுற்றி திரிகிறது. மழை காலங்களில் காலனி அருகில் உள்ள ஓடையில் தண்ணீர் பெருகி காலனியில் உள்ள வீடுகளுக்குள் வந்து விடுகிறது. ரோடு வேண்டும்
வள்ளியம்மாள், குடும்ப தலைவி: அமிர்தபுரம் காலனியில் வயதானவர்கள் தான் அதிகம் உள்ளனர். மெயின் ரோட்டில் இருந்து காலனிக்கு வரும் ரோடு மோசமான நிலையில் உள்ளது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக நடக்க முடியாமல் உள்ளது. தெருக்களிலும் ரோடு அமைக்க வேண்டும். கழிப்பறை தேவை
சரஸ்வதி, குடும்ப தலைவி: எங்கள் காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் ஆண்கள், பெண்களுக்கு கழிப்பறை கட்டப்பட்டது. கட்டடத்தில் காரைகள் பெயர்ந்து விழுகிறது. உள்ளே செல்ல பெண்கள் தயங்குகின்றனர். கழிப்பறைக்கு செல்லும் பாதையும் முட்புதர்கள் சூழ்ந்து நடக்க முடியாமல் உள்ளது. நகராட்சி எங்களுக்கு புதிய கழிப்பறை கட்டி தர வேண்டும். குடிநீர் இல்லை
ஜெயலட்சுமி, குடும்ப தலைவி: எங்கள் காலனியில் குடிநீர் வசதி இல்லை. நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட 2 பொது குடிநீர் குழாய்களில் ஒன்று பழுதாக உள்ளது. மற்றொன்றில் தண்ணீர் வருவதே இல்லை. குடிநீரை நாங்கள் தனியார் இடத்தில் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். புழக்கத்திற்கு பொது அடிகுழாய் 2 அமைத்துள்ளனர். ஒன்றில் தண்ணீர் வரவில்லை. மற்றொரு அடிகுழாயை பராமரிப்பு பணி என எடுத்து சென்று விட்டனர்.