| ADDED : ஏப் 29, 2024 05:12 AM
சாத்துார்: ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர முடியும், என சாத்துார் சாத்துார் கே.எம்.டி.வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர் தாமு பேசினார்.கம்ம மகா ஜன சங்க டிரஸ்ட் தலைவர் திருவேங்கடசாமி தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள் சாமி, பள்ளியின் செயலாளர் ராஜேஷ் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பிரியவந்தனா ஆண்டறிக்கை வாசித்தார். நடிகர் தாமு பேசியதாவது: டாக்டர் அப்துல் கலாம் கூறியது போல ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இன்னொரு பெற்றோர் ஆவர்.நான் பள்ளியில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தவன் கடைசி பெஞ்சிலிருந்து பசுமாடு, நரி, நாய் போல சத்தம் எழுப்பி ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்வேன். எனது திறமையை கண்டறிந்த பத்மா ஆசிரியர் எங்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மிமிக்கிரி செய்ய வைத்து என்னை மேடையில் அரங்கேற்றினார்.வாழ்க்கையில் இரண்டு கிங்குகளை அனுமதிக்காதீர். ஒரு கிங் ''ஸ்மோக்கிங்'' இன்னொரு கிங் ''டிரிங்கிங்'' புகைப்பழக்கமும் மது பழக்கமும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது, என்றார். பள்ளியில் சிறந்த குழுவிற்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.