| ADDED : ஆக 12, 2024 03:43 AM
விருதுநகர் : குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடு மழையில் சேறும், சகதியுமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு மாறியுள்ளதால் விருதுநகர் தந்திமரத்தெரு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகர் தந்திமரத்தெரு வழியாக தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. மேலும் ராமச்சந்திரன் தெரு, தந்திமரத்தெருவிற்கு இடையிலான சந்து வழியாக நக்கீரர் தெரு, குருசாமி கொத்தனார், கசாப்காரர், கோபால் தெருவைச் சேர்ந்தவர்கள் நடந்து பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வது வழக்கம்.இந்த சந்தில் இருந்த பேவர் பிளாக் கற்கள் குழாய் பதிக்கும் பணிக்காக பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் சீரமைக்கப்படாததால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் தந்திமரத்தெருவில் ரோட்டை தோண்டி பல நாட்கள் ஆகியும், இதுவரை முழுவதும் முடிக்கப்படாமல் காலதாமதம் செய்கின்றனர். மண்ணை வீட்டின் முன்பு மலை போல குவித்து வைத்திருப்பதால் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.இங்கு வசிப்போர் மருத்துவ அவசரத்திற்கு கூட வாகனங்களை கொண்டுச் செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ் வர முடியாததால் நோயாளிகளை டூவீலர்களில் வைத்து கொண்டுச் சென்று, அதன் பின் கார், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது.கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பெய்யும் மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரும் கலங்கலாக வருகிறது. ரோட்டை சீரமைக்காததால் குழந்தைகளுடன் வெளியே நினைத்தாலும் முடியவில்லை.குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டிய ரோட்டில் நடந்து, சைக்கிள், டூவீலரில் செல்லும் முதியவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் சிலர் தடுமாறி விழுகின்றனர். இங்கு குவிந்து கிடக்கும் மண்ணை சீரமைத்து மக்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.- சந்தனமாரி, குடும்பத்தலைவி.தாமிரபரணி குடிநீர் திட்டம் எனக்கூறி பணிகளை துவங்கினர். இதை சரி வர முடிக்காமல் தற்போது கிடப்பில் போட்டுள்ளனர். இப்பகுதியினர் தங்களின் சொந்த வாகனங்களில் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.- செல்வராணி, குடும்பத் தலைவி.
கிடப்பில் பணிகள்
பணிகள் நடப்பது குறித்து ரோட்டில் எவ்வித முன்னறிவிப்பு பலகைகளும், தடுப்புகளும் இல்லை. அதனால் ரயில்வே கேட் கடந்து வரும் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. எனவே பணிகள் நடக்கும் பகுதியில் தடுப்புகளை வைக்க வேண்டும்.- ராதாகிருஷ்ணன், ரியல் எஸ்டேட்.
தடுப்புகள் எதுவும் இல்லை