| ADDED : டிச 28, 2025 05:55 AM
சேத்துார்: சேத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே 24 மணி நேரமும் தடையற்ற மது விற்பனையால் போதையின் பிடியில் தொழிலாளர்கள் சிக்கி வருகின்றனர். ராஜபாளையம் அருகே சேத்துார் பேரூராட்சி உள்ளது. 18 வார்டுகளுடன் தேர்வுநிலை பேரூராட்சியாக ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உள்ள இவ்வூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அமைந்துள்ளதால் விவசாயம் பிரதானமாகவும், விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே சில ஆண்டுகளுக்கு முன் அரசு டாஸ்மாக் கடை நீண்ட எதிர்ப்புகளுக்கு இடையே திறக்கப்பட்டது. இதுகுறித்து பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அனைத்து கட்சி சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். இருப்பினும் ஆளுங்கட்சியினர், வருவாய்துறை ஒத்துழைப்பில் டாஸ்மாக் கடைஅதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அறிவித்த நேரத்தின்படி இன்றி 24 மணி நேரமும் தடையற்ற மது விற்பனை நடைபெறுவதால் இப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் போதைக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இதுகுறித்து சாமி, தொழிலாளர்கள் அதிகம் உள்ள இங்கு டாஸ்மாக் கடை இடமாற்ற கோரி பெண்கள், அனைத்துக் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பாட்டிலுக்கு 50 முதல் 100 வரை வைத்து விற்பதுடன் எந்தவித தடையும் இன்றி தாராளமாக விற்பனை நடைபெறுகிறது. போதையின் பிடியில் தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் சிக்குவதால் சட்டவிரோத விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.