நரிக்குடி சத்திரத்தில் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுப்பு
நரிக்குடி; நரிக்குடி சத்திரத்தில் 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் தானமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்க நினைப்பவர்கள் காராம் பசுவை கொன்ற பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள் என எழுதப்பட்டுள்ளது. நரிக்குடி சத்திரத்தில் கல்வெட்டுக்கள், சிலைகள் புதைந்து கிடப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதனை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். இதை ஏற்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நரிக்குடி சத்திரத்தில் ஆய்வு செய்தனர். புதைந்து கிடந்த ஏராளமான கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன.அதில் 200 ஆண்டுகளுக்கு முன் ஆதிச்சநல்லுார் என்ற பெயரால் அவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. விளையும் தானியங்களில் மூன்றில் ஒரு பங்கு அன்னதானம் வழங்குவதற்கு தானமாக வழங்க வேண்டும், நிலங்களை உரிமை கொண்டாடவோ, அபகரிக்கவோ, கொடை அளிப்பதை தடுக்கவோ நினைப்பவர்கள் காராம் பசுவை கொன்ற பழிச் சொல்லுக்கு ஆளாவர் என கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்தன.இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குப்பின் பல்வேறு ஆய்வுகள் செய்யப்படும். கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.