| ADDED : பிப் 17, 2024 04:22 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் அங்கன்வாடி மையம் நூலகத்தில் செயல்படுவதால், அங்குள்ள சிறுவர்கள் இட நெருக்கடியால் தவிக்கின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆத்திபட்டி ஊராட்சி . இங்குள்ள அங்கன்வாடியில் 33 குழந்தைகள் உள்ளனர். கட்டடம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பல பகுதிகளில் சேதமடைந்து இடியும் நிலையில் இருந்தது. சிறுவர்களின் நலன்கருதி கட்டடத்தை இடித்து விட்டு புதியதாக கட்ட முடிவு செய்யப்பட்டது.ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகம் கட்டடத்தை இடிக்க ஊராட்சிக்கு உத்தரவிட்டது. கட்டிடமும் இடித்து தரை பக்கம் தரைமட்டம் ஆக்கப்பட்டது. அதுவரை தற்காலிகமாக அருகில் உள்ள நூலகத்தில் மையம் 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. போதுமான இட வசதி இல்லாமல் குழந்தைகள் தவிக்கின்றனர். ஒரு பகுதியில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சிரமப்பட்டு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.புதிய அங்கன்வாடி மையம் கட்ட பலமுறை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பி.டி.ஓ., விடம் மனு கொடுத்தும், பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இந்த ஆண்டிற்கான 75 புதிய அங்கன்வாடி கட்டடங்கள் கட்ட தேவையுள்ள இடங்களை கேட்டுள்ளது.அதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 9 ஊராட்சிகளை தேர்வு செய்துள்ளது. ஆனால், அதில் ஆத்திப்பட்டி ஊராட்சி சேர்க்கப்படவில்லை. பல மாதங்களாக சொந்த கட்டடம் இன்றி, நூலகத்தில் இட நெருக்கடியில் இயங்கி வரும் ஆத்திப் பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையம் லிஸ்டில் சேர்க்கப்படவில்லை.மாவட்ட நிர்வாகம் ஆத்திப்பட்டியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.