ஊராட்சிகளுக்கு வழங்கிய பேட்டரி வாகனங்கள் வீணாகுது!
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க பேட்டரியால் இயங்கும் மினி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குப்பைகளை சேகரித்து கிடங்கிற்கு கொண்டு செல்ல, தேவையான தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். பல ஊராட்சிகளில் குப்பைகள் தெருக்களில் தேங்கி கிடக்கின்றன. இந்நிலையில், அரசு, குப்பைகளை தெருவிற்கு தெரு சென்று எடுத்து செல்ல, ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கி வருகிறது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளுக்கு 61 பேட்டரி வாகனங்களும், நரிக்குடியில் 37 பேட்டரி வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. பேட்டரி வாகனங்கள் வந்து, ஒன்றிய அலுவலகத்தில் 2 மாதங்களாக இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் வாகனங்கள் வழங்கப்பட்டன.இதில், ஆத்திபட்டி 11, பாலையம்பட்டி 14, கஞ்சநாயக்கன்பட்டி 8, செம்பட்டி 5 என, உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாகனங்களை இயக்குவது எளிது என்றாலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் போதுமான அளவில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. பல ஊராட்சிகளின் 5 க்கும் குறைவான அளவில் தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர்.ஆனால் வழங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள் ஒரு சில ஊராட்சிகளில் 10க்கும் மேல் உள்ளதால் இவற்றை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் பல குறைபாடுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊராட்சிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பல வாகனங்கள் பழுதாகி நின்றன. அவற்றை சரி செய்து தான் கொண்டு சென்றுள்ளனர். தரமற்ற பேட்டரி வாகனங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் ஊராட்சி செயலர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல், இவற்றை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தூய்மை பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்,பல மாதங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழையிலும் வெயிலும் காய்ந்து கிடந்த பேட்டரி வாகனங்கள் தற்போது ஊராட்சி அலுவலகங்களில் அதேபோன்று காட்சி பொருளாக நிற்கும் நிலை ஏற்படும்.