புத்தகத் திருவிழா கட்டுரை/ புத்தகம் படித்து வித்தகம் படைக்க குவிந்த கூட்டம் விருதுநகர் புத்தகத் திருவிழா கோலாகலம்
விருதுநகர், : விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பபாசி, நுாலக இயக்ககம் சார்பில் புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. 110 ஸ்டால்களில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகளவில் உள்ளதாலும், தற்போது காலாண்டு விடுமுறை என்பதாலும் குட்டீஸ் குஷியாக பெற்றோருடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். நாளை(அக். 7) கடைசி நாள். தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது, அதை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பட்டிமன்றம் நடந்து வருகிறது. விடுமுறை காலம் என்பதால் மாணவர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக உண்டியல் வழங்கப்பட்டு, அதில் சேகரிக்கும் பணத்தை வைத்து 20 சதவீத தள்ளுபடியில் புத்தகங்களை பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. புத்தக உண்டியல் மூலமும் நிறைய மாணவர்கள் புத்தகங்களை பெற்றுள்ளனர். இதே போல் மற்ற வாசகர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. வார நாட்களை போல வார இறுதி நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
புத்தகங்கள் இலவசம்
புத்தகத் திருவிழாவில் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில் (ஸ்டால் 88) புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 செலுத்தினால் புத்தகங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
புத்தகத் திருவிழாவில் தங்கள் அனுபவம் குறித்து வாசகர்கள் கூறியதாவது:
நிறைய புத்தகங்கள் படிக்க ஆசைதமிழ்செல்வி, விருதுநகர்:: கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிலேயே நான் பொன்னியின் செல்வன், காமிக்ஸ் புத்தகங்கள் என நிறைய வாங்கி சென்றேன். அவற்றை படித்து வருகிறேன். இந்த ஆண்டும் சில புத்தகங்களை பார்த்து வைத்துள்ளேன். ஓய்வு நேரத்தில் வீட்டில் பயனுள்ள புத்தகங்களை படிப்பது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. நிறைய புத்தகங்களை படிக்க விரும்புகிறேன்.
கவனத்தை ஈர்த்த புத்தகங்கள் சில...
பெண்ணே பேராற்றல்பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என பெருமைப்படுகிறோம். ஆனால் அவ்வையார் பேசிய அரசியலும் இலக்கியமும் நம் நினைவுக்கு வர தாமதமாகிறது. அதன் பின்னரும் நிறைய பெண்கள் பேசினர், எழுதினர். நாம் அதை மறந்து விட்டோம். அதை நினைவூட்டும் விதமாக இந்நுால் அமைந்துள்ளது. பெண்களும், அவர்களை புரிந்து கொளள ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய நுால்ஆசிரியர்: ப.திருமலைவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை: ரூ.260.தமிழக நீராதாரமும் நிலத்தடி நீரும்புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் நீரின்றி விவசாயம் பொய்த்து, விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். விளைநிலங்கள் வீட்டு மனைகளாகி விட்டன. மணல் கொள்ளையால் நதிநீர் படுகைகள் மலட்டு தன்மை அடைந்து விட்டன. நீர்நிலைகளை துார்வாரும் சிந்தனையை ஆள்பவர்களிடம் துார்வார வேண்டியுள்ளது, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட அனைத்து நீராதாரங்கள் பற்றிய முழுமையான புவியியல் பார்வையை இந்நுால் விளக்குகிறது.ஆசிரியர்: ஜெகாதாவெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்விலை: ரூ.260ராமாயண மகாகாவியம் ராம சரித்திரத்தை முதலில் எழுதியவர் வால்மீகி முனிவர். இந்த காவியத்தை சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த, அழகிய நடையில் கம்பர் தமிழில் படைத்து, நமக்கு கொடுத்திருக்கிறார். வா.ஜானகிராமன் எழுதியுள்ள 'ராமாயண மகாகாவியம்' வான்மீகத்தையும் கம்பனையும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு ஒப்பீட்டு நூல். ராமாயண மகாகாவியத்தில் கம்பர் எங்கெல்லாம் மூல நூலிருந்து விலகுகிறார், மாறுபடுகிறார். என்று ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது. “வால்மீகி ராமாயணத்தையும் நம் தமிழ்க் காப்பியமான கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு உயரிய நுாலாக இந்நுால் திகழ்கிறது.ஆசிரியர்: வா.ஜானகிராமன்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை: ரூ.220கரமாஸவ் சகோதரர்கள்உலகின் மகத்தான படைப்பாகிய இந்நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான தொடரமைப்புகளைப் பயன்படுத்தியும், ரஷ்ய இலக்கியத் தொடர்களையும் மிகுந்த கவனத்தோடும் மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அசைவுகளையும் சொற்களையும் உளவியல் அம்சம் பொருந்த வார்த்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் பாத்திர உருவாக்கங்கள் தமிழுக்கு ஏற்ப வந்திருக்கின்றன. ஆசிரியர்: தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: அரும்பு சுப்பிரமணியம்வெளியீடு: காலச்சுவடுவிலை: ரூ.1650விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல் 20ஆம் நுாற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் பிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்பிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளை, இந்நுால், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கிற விவாதங்களின் வாயிலாக எடுத்துரைக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள தத்துவஞானி, தன்னுடைய மாணவனான அந்த இளைஞனிடம், பிறர் நம்மிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி நம்மால் நம்முடைய சொந்த வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார். இந்த விதமான சிந்தனை நமக்கு ஒரு விடுதலையுணர்வை அளிக்கிறது. ஆசிரியர்: இச்சிரோ கிஷிமி, பூமிடாகா கோகா, தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமிவெளியீடு: மஞ்சுள்விலை: ரூ.450