உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட் --அல்லல்படும் ராஜபாளையம் பயணிகள்

 முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட் --அல்லல்படும் ராஜபாளையம் பயணிகள்

ராஜபாளையம் : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இலவச கழிப்பறை, உணவகங்கள், பஸ்களுக்கான நேர அட்டவணை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஆறு மாதங்களை கடந்தும் ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அல்லல்பட்டு சென்று வருகின்றனர். ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த நிலையில் கட்டடங்கள் பலமிழந்ததால் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி 40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மே 29ல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 300க்கும் அதிகமான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இங்கு இதுவரை பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் கிராமங்களுக்கு செல்லும் நேர அட்டவணை வைக்காமல் உள்ளனர். இதுபோல் எந்தெந்த பகுதியில் இருந்து அவர்களுக்கான கிராமங்களுக்கு செல்லும் ஊர் பெயர் வழித்தடங்களும் எழுதப்படவில்லை. பணிக்கு சென்று வருபவர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நுழைவுப் பகுதி ஓரங்களிலும் உள் பகுதியிலும் டூவீலர் பார்க்கிங்காக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர். இரவில் பயணிகள் இயற்கை உபாதைக்கு வழியில்லாத வகையில் 8:00 மணிக்கு மேல் கட்டண கழிப்பறைகள் பூட்டப்படுகிறது. இதனால் சிறுமிகள், பெண்கள் ஒதுங்க வழி இன்றி பாதிக்கின்றனர். வளாகத்தில் கடைகள் ஏலம் விடப்படாததால் புதிய கடைகள் திறக்காமலும் உணவகங்கள் செயல்படாமலும் உள்ளது. தொடங்கிய சில நாட்களில் அடிப்படை வசதிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்தும் வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கவில்லை. தீர்வு ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் நகரின் நடுவே இயங்குவதால் எப்போதும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. பயணிகளின் அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பறை, பஸ் புறப்படும் நேர அட்டவணை, நிறுத்த அட்டவணை, உணவகங்கள் செயல்படுவது, டூவீலர்களை பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைப்பது போன்றவற்றை கண்காணித்து சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் காட்சி பொருள் பஸ் ஸ்டாண்ட் திறக்க படும் போது அன்று ஒரு நாள் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் செயல்பாட்டில் இருந்தது தற்போது வரை கானல் நீராகவே இருப்பதால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் தேவையற்ற செலவு பயணிகளுக்கு ஏற்படுகிறது. முத்துராஜ், வியாபாரி இலவச கழிப்பறை இல்லை பொது இடமான பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை அமைக்கப்பட வேண்டி விதி இருந்தும் செயல்படுத்தவில்லை. 24 மணி நேரம் பஸ்கள் வந்து செல்லும் இங்கு கட்டண கழிப்பறையும் இரவு நேரங்களில் பூட்டப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை திறப்பதில்லை. சுப்புராஜ், தொழில் முனைவோர். பாதுகாப்பு கேள்விக்குறி சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதால் டாஸ்மாக் கடையிலிருந்து நேராக குடிமகன்கள் ஓய்வெடுக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு போலீஸ் அவுட் போஸ்ட் திறந்துள்ளனர். இருப்பினும் போதிய பாதுகாப்பு இல்லை. மாடசாமி, லாரி உரிமையாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை