சிவகாசி:சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோபால்சாமி மகன் ஜெயசூர்யா 24. இவர் தனது நண்பர்கள் சரவணன், முத்துப்பாண்டி ஆகியோருடன் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக விளாம்பட்டியை சேர்ந்த கார்த்திக், அதே பகுதியில் நடத்தி வரும் கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தனர்.அப்போது கார்த்திக் அவர்களிடம், தனக்கு தெரிந்த துணை ராணுவ படையில் (சி.ஆர்.பி.எப்) டி.எஸ்.பியாக இருந்து ஓய்வு பெற்ற வெம்பக்கோட்டை அருகே மேலாண்மறைநாடு பகுதியை சேர்ந்த குருசாமி 74, என்பவர் பலருக்கு சி.ஆர்.பி.எப்.,ல் வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறி உள்ளார்.இதையடுத்து ஜெயசூர்யா வீட்டிற்கு வந்த குருசாமி, கார்த்திக், மேலாண்மறைநாடு பகுதியை சேர்ந்த இம்மானுவேல், மோகன்தாஸ், கணேசன் ஆகியோர் சி.ஆர்.பி.எப்.,ல் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடமும் 2022 நவ.ல் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பெற்றனர்.அதேபோல் மாரனேரியை சேர்ந்த அழகுமுத்து, பாண்டியராஜன், கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவராமன், பழையாபுரத்தை சேர்ந்த கதிரேசன், ராஜ்குமார், சிப்பிப்பாறையைச் சேர்ந்த மதன்ராஜ், மாரிமுத்து ஆகியோரிடம் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், துரைச்சாமியாபுரம் ஈஸ்வரனிடம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், விருதுநகர் நாகராஜனிடம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், சன்னாசிப்பட்டி கண்ணபிரானிடம் ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் உட்பட பலரிடம் ரூ.42 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக்கொண்டு, 5 பேருக்கு போலி பணி நியமன ஆணைகளை வழங்கினர்.அதை நம்பி சென்னை ஆவடியில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்ற போது போலி ஆணைகள் என தெரியவந்தது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும், ஏமாந்த பணத்தை மீட்டு தருமாறு முதல்வரின் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.குருசாமி, கார்த்திக், இமானுவேல், மோகன்தாஸ், கணேசன் ஆகியோர் மீது மோசடி, போலி ஆவணம் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.