| ADDED : ஜூலை 12, 2024 05:31 PM
காரியாபட்டி:''என்னை விட்டு விலகிச் செல்வதாக கூறியதால் ஆத்திரம் தாங்காமல் நாகலட்சுமியை 24,கழுத்தை அறுத்துக் கொன்றேன், என கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் ராஜபாண்டி 27, போலீசாரிடம் தெரிவித்தார். காரியாபட்டி அல்லிக்குளத்தைச் சேர்ந்த நாகலட்சுமி .அருப்புக்கோட்டை திருவிருந்தாள்புரத்தைச் சேர்ந்த பீமாராஜை 46, திருமணம் முடித்தார். ஒரு ஆண் குழந்தை உள்ளது. உறவினரான மத்தியசேனையைச் சேர்ந்த ராஜபாண்டியுடன் நெருங்கி பழகினர். நேற்று காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி பகுதியில் ராஜபாண்டி கள்ளக்காதலி நாகலட்சுமியை கழுத்தறுத்து கொலை செய்து, தப்பி ஓடினார். டி.எஸ்.பி., காயத்ரி தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., அசோக் குமார் முன்னிலையில் போலீசார் தேடி வந்தனர். மத்தியசேனையில் பதுங்கி இருந்த ராஜபாண்டியை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் ராஜபாண்டி அளித்த வாக்குமூலம்:நாகலட்சுமியுடன் ஒன்றரை ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தேன். ஒரு மாதமாக என்னுடன் பேசுவதை நிறுத்தினார். பலமுறை அலைபேசியில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. கடைசியாக ஒரு முறை பேசினால் போதும். தொந்தரவு செய்ய மாட்டேன் என குறுந்தகவல் அனுப்பினேன். நேற்று நாகலட்சுமி எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, காரியாபட்டியில் உள்ள வங்கிக்கு வருவேன் அப்போது பேசலாம் என்றார். அதேபோல் வங்கியில் இருந்த நாகலட்சுமி, ஒரு வயது பையன், உறவினர் பவித்ராவை டூவீலரில் ஏற்றிக்கொண்டு வெளியில் செல்லலாம் என்றேன். அப்போது நாகலட்சுமிதான் எஸ். கல்லுப்பட்டி பகுதிக்கு போவோம் என்றார். காட்டுப் பகுதியில் வைத்து கெஞ்சினேன். விலகிச் செல்வதில் உறுதியாக இருந்தாள். அவளை விட்டு விலக மனம் இல்லை. இதனால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றேன். என்றார்.