சிவகாசியில் மந்த கதியில் நடக்கும் மாநகராட்சி அலுவலக கட்டடப்பணி
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் மந்தமாக நடப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள், ஆனையூர், சித்துராஜபுரம், தேவர்குளம் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 2021 ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எதிர்கால மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக சாத்துார் ரோட்டில் 2.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.அங்கு 1.75 ஏக்கர் நிலத்தில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.10 கோடியில் புதிய அலுவலகமும், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.5 கோடியில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கு 2023 ஏப்ரலில் டெண்டர் விடப்பட்டு, ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.புதிய மாநகராட்சி அலுவலகத்தில் கீழ் தளத்தில் 15,970 சதுர அடி பரப்பளவில் பார்க்கிங் வசதி, தரை தளத்தில் 15,920 சதுர அடி பரப்பில் மேயர், கமிஷனர், துணை மேயர், வரி வசூல் மையம், ஆய்வு கூட்ட அரங்கு, முதல் தளத்தில் 14,638 சதுர அடியில் பொறியியல் பிரிவு, 100 கவுன்சிலர்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கு, பிற துறைகளுக்கான தனித்தனி அறைகளுடன் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 2024 மார்ச் மாதம் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் பல கட்டுமான பணி மந்தமாக நடந்து வருகிறது. மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும் வளாகம் முழுவதும் புதர் மண்டி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி விட்டது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.