| ADDED : நவ 25, 2025 05:41 AM
விருதுநகர்: தமிழகத்தில் இந்தாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 5 பேர் வரை மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளை காரணம் காட்டி மின்வேலி அமைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை முறைப்படி கட்டுப்படுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் நவ. 5ல் சாத்துார் அருகே நடுவப்பட்டியில் தெய்வானை என்பவரது நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததில் மின்சாரம் தாக்கி ரவிக்குமார் 47, சுரேஷ்குமார் 45, உயிரிழந்தனர். நவ. 12ல் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த குப்பம் கிராமத்தில் வாலிபர்கள் சாமுண்டி 27, அருண்குமார் 17, முயல் வேட்டையில் ஈடுபட, அப்பகுதியில் உள்ள பாஷா, 40, என்பவரது விளைநிலத்தை கடந்து சென்ற போது மின்வேலியில் சிக்கி பலியாகினர். நவ. 23ல் மீண்டும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தொப்புலாகரையில் விளைநிலத்தில் போடப்பட்டிருந்த மின் வேலியை மிதித்த விவசாயி மாரிச்சாமி 32, மின்சாரம் பாய்ந்து பலியானார். இந்த மாதத்தில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளனர். அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மின்வேலிக்கு சோலார் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். மின்துறையினர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் சம்பவ இடங்களில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தாமல் நேரடி மின்சாரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. பல இடங்களில் பகல் நேரங்களில் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் வேலியை சோலாரிலும், இரவில் காட்டுப் பன்றிகளுக்கு பயந்து நேரடி மின்சாரத்திலும் கொடுக்கின்றனர். பலர் வன அலுவலர்களின் அனுமதி பெறாமலும் மின்துறை அனுமதி பெறாமலும் வைக்கின்றனர். இதை ஒழுங்குபடுத்த உரிய நெறிமுறைகள் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் உயிரிழப்புகள் தொடரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.