| ADDED : ஜன 11, 2024 12:26 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டையில், 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், 3 லட்சம் பேர் நேரடியாகவும், 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த, 2023 நவ., 12ல் தீபாவளி முடிந்த நிலையில் அடுத்த சில தினங்களில் பட்டாசு உற்பத்தி துவங்கப்பட்டது. அப்போது பருவமழை துவங்கியதால் உற்பத்தி பாதிக்கப்பட்டன.அவ்வப்போது ஆலைகள் திறக்கப்பட்டாலும், அடுத்தடுத்து தொடர் மழை பெய்ததால் உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெறவில்லை. சமீபத்தில், சிவகாசி சுற்றுப்பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.பட்டாசு உற்பத்தி ஒரு மாதமாக முழுமையாக பாதிப்பில் உள்ளது. சற்று ஈரப்பதம் இருந்தாலும் உற்பத்தி செய்ய வழியில்லை. மழை தொடரும் பட்சத்தில் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி சிரமப்படுகின்றனர்.இந்த ஆண்டு தீபாவளி அக்., 31ல் வருகிறது. இந்த மாதம் பொங்கல் என, அடுத்தடுத்து விடுமுறை இருப்பதால் எஞ்சிய ஒன்பது மாதம் மட்டுமே உள்ளது. இதனால் வரும் தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைய வாய்ப்புள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.