உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமான சமுதாயக்கூடம், கண்மாயில் கழிவுநீர்

சேதமான சமுதாயக்கூடம், கண்மாயில் கழிவுநீர்

காரியாபட்டி : மல்லாங்கிணரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் திம்மன்பட்டி கண்மாயில் கலப்பதால் நீர் மாசடைந்து, தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பது, அருந்ததியர் காலனியில் 15 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி போன சமுதாயக்கூடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பது, ஓராண்டாகியும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் சப்ளை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் வாறுகால் வழியாக திம்மன்பட்டி கண்மாய்க்கு செல்கின்றன. அப்பகுதிகளுக்கு கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.மழை நேரங்களில் நீர் வரத்து ஏற்பட்டு கண்மாய் நிறையும் சமயத்தில் கழிவு நீரால் மாசு அடைந்து பச்சை பசேல் என காணப்படுகின்றன. ஆழ்துளை கிணற்றில் கழிவு நீர் கலந்து குடிநீராக பயன்படுத்தி வருவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருவதுடன், மேலும் பலர் பாதிக்கும் அபாயம் உள்ளது.அருந்ததியர் காலனி சமுதாயக்கூடம் பராமரிக்காததால் பயன்பாடின்றி சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை குடிநீர் சப்ளை செய்யவில்லை. சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வில்லை.

தொற்று நோய் அபாயம்

மலைச்சாமி, விவசாயி: கழிவு நீர் கலப்பதால் மழை நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. கண்மாயிலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கிருமிகள் பரவி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்குப் பயந்து கொண்டு குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டும்

ராஜேந்திரன், விவசாயி: சமுதாயக்கூடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. அங்கு நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. கிடப்பில் போட்டதால் புதர் மண்டி கிடக்கின்றன. தற்போது சமூக விரோத செயல்களுக்கு பயன்படும் இடமாக மாறி உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். டெபாசிட் வசூல் செய்தும் குடிநீர் சப்ளை இல்லை.

குடிநீர் சப்ளை இல்லை

ஆற்றல் அரசு, விவசாயி: பெரும்பாலானவர்களிடம் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்ய ரூ. 5000 வரை டெபாசிட் வசூல் செய்தனர். ஓராண்டாகியும் இதுவரை குடிநீர் சப்ளை இல்லை. ரோடுகள் சேதம் அடைந்து வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. விரைந்து குடிநீர் சப்ளை செய்யவும், சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை