அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சேதமடைந்த கழிப்பறை: அவதியில் மக்கள்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு மக்கள் பட்டா மாற்றம், சான்றிதழ்கள் பெற தினமும் 500க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் நிலையில் தங்கள் பணி முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு என தனியாக கழிப்பறை உள்ளது.பழைய தாலுகா அலுவலக கட்டடத்திற்கு எதிரே அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டி பல மாதங்கள் ஆகியும் திறப்பு விழாவிற்கு காத்து கிடக்கிறது. புதிய கட்டடம் திறக்கப்பட உள்ளதால், பழைய கட்டடத்தில் உள்ள கழிப்பறையை பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டனர். இங்கு தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறையை தேடி ஓட வேண்டிய நிலையில் உள்ளது. புதிய கட்டடம் திறக்கும் வரை மக்களின் நலன் கருதி, கழிப்பறையை பராமரிக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.