உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / யானை - மனித மோதல் குறித்த விழிப்புணர்வு தேவை! மலையடிவாரங்களில் அவசியமாகும் நடவடிக்கைகள்

யானை - மனித மோதல் குறித்த விழிப்புணர்வு தேவை! மலையடிவாரங்களில் அவசியமாகும் நடவடிக்கைகள்

மத்திய அரசு 2010ல் யானையை பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இதில் ஆசிய யானைகள் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு அட்டவணையில் அழியும் நிலை விலங்காக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இந்த யானைகள் தமிழகத்தில்கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் அதிகளவில் காணப்படுகிறது.இங்கு ராஜபாளையம் தேவியாறு முதல் அய்யனார் கோயில் வரை, அய்யனார் கோயிலில் இருந்து காட்டழகர் கோயில் வரை, காட்டழகர்கோயிலில் இருந்து பிளவக்கல் அணையின் நீர்பிடிப்பு பகுதி வரை, பிளவக்கல் அணையில் இருந்து கோவிலாறு அணை வழியாக மதுரை மாவட்டம் பேரையூர், சாப்டூர், அணைக்கரை, பி.கிருஷ்ணாபுரம், எழுமலை வருஷநாடு மேகமலை வரை என நான்கு வனச்சரகங்கள் உள்ளன.மலையடிவாரத்தில் தேவதானம், சாஸ்தா கோயில், வாழவந்தான் கோயில், அய்யனார் கோயில், கல்லாத்துக்காடு, ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகதோப்பு, அத்திக்கோயில், பந்தப்பாறை, பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி, வ.புதுப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை, நெடுங்குளம், தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருக்கும்.ஒரு யானை அதன் மொத்த எடையில் 5 சதவீத எடைக்கு உண்ணும். அதாவது தினசரி 150 - 200 கிலோ உணவை எடுத்து கொள்ள வேண்டும். நுாறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 18 மணி நேரம் நடந்து கொண்டே உண்ண வேண்டும். இதுதான் அதன் இயல்பு. வறட்சியான காடு என்றால் 40 கி.மீ., துாரத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். பசுமை காடுகள் என்றால் 20 கி.மீ., துாரம் நடந்து சென்று உண்ண வேண்டும்.நார்ச்சத்து, உப்புள்ள மண், ஊட்டச்சத்து மிகுந்த பலவகையான உணவுகளை தேடி தேடி சாப்பிட்டால் தான் யானை ஆரோக்கியமாக இருக்கும். இந்த மாதிரியான சூழலில் அதன் வழித்தடத்தை மறைத்து ஆக்கிரமிப்பதால் யானைகள் தடமாறுகின்றன. அவை வனப்பரப்பில் இருந்து விலகி மலையடிவார விளைநிலங்களுக்குள் வந்து செல்கின்றன.இவ்வாறு உணவுக்காக மனத வாழ்விடங்களான விளைநிலங்களுக்கு வருவதால் மனிதன் - யானை மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. சில சமூக விரோதிகள் தந்தம், தோலுக்காக வரும் யானைகளை வேட்டையாடுகின்றனர். இந்தாண்டு மே மாதம் கூட யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இதை வராமல் தடுக்க வனப்பரப்பில் இருந்து வயல்வெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் அகழிகள் தோண்டப்பட வேண்டும்.யானைகள் வருவதற்கு உண்டான எச்சரிக்கை முன்பே தெரியும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். யானைகளுக்கு உண்டான தீவனம், உப்பு கட்டி போன்வற்றை கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையடிவாரங்களில் தோட்டம் வைத்துள்ள விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ