உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சாத்துார்-திருவேங்கடம் சாலையை இருவழி சாலையாக மாற்ற எதிர்பார்ப்பு

 சாத்துார்-திருவேங்கடம் சாலையை இருவழி சாலையாக மாற்ற எதிர்பார்ப்பு

சாத்துார்: சாத்துார் - திருவேங்கடம் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் இருவழிச் சாலையாக மாற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்துார் நகரில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் திருவேங்கடத்திற்கு செல்லும் சாலை, நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து துவங்கி படந்தால், ராமச்சந்திராபுரம், ஊஞ்சம்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, சுப்பிரமணியபுரம், தாயில்பட்டி, மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி கிராமங்கள் உள்ளன. மேலும் சாத்துார் நகராட்சி பகுதியில் உள்ள குருலிங்காபுரம், மேலக்காந்தி நகர், அண்ணா நகர், பெரியார் நகர்,வசந்தம் நகர், மருதுபாண்டியர் நகர், அனுமன் நகர், வைகோ நகர்,முத்துராமலிங்கபுரம் ஆகிய நகர் பகுதிகளும் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் அதிகாலை முதல் இரவு வரை அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆலங்குளத்தில் இருந்தும் எட்டக்காபட்டியில் இருந்தும் அதிக அளவில் சிமெண்ட் மூடை லோடு, கிராவல் மண், உடை கற்கள் இந்த சாலை வழியாக எடுத்து வரப்படுகிறது. பள்ளி வாகனங்களும் அதிக அளவில் நகருக்குள் வந்து செல்லும் நிலையில் திருவேங்கடம் சாலையிலும் நான்கு வழிச்சாலை சந்திப்பிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலை ஒரு வழி பாதையாக உள்ளது. நான்கு வழிச்சாலையை கடந்து செல்லும் போதும் குறுக்கு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களுக்காகவும் மெயின் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒதுங்கி நிற்க கூட இடம் இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. இந்த சாலையை இரு வழிச் சாலையாக மேம் படுத்துவதன் மூலம் ஒருபுறம் வாகனம் செல்வதற்கும் மறுபுறம் வாகனங்கள் வருவதற்கும் வசதியாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். மேலும் முக்கிய சந்திப்புகள் உள்ள பகுதி யில் டிராபிக் சிக்னல்கள் அமைத்து டிராபிக் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டால் வாகன நெரிசலால் ஏற்படும் விபத்துக்களையும் தடுக்கலாம். எனவே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களில் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு சாத்துார் திருவேங்கடம் சாலையை இருவழிச் சாலையாக மேம்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை