பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விடுவதால் தொடரும் வெடி விபத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
சிவகாசி: விருதுநகர்மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டு விதி மீறிஉற்பத்தி செய்யப்படுவதால் தொடர் விபத்து, உயிர் பலிகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு முறையான ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர் ,டி.ஆர்.ஓ., மற்றும் சென்னை உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுவது இயல்புதான். அதில் பெரிய பாதிப்பு இருக்காது.ஆனால் ஆலைகளில் பாதுகாப்பின்றி, விதி மீறல்களுடன் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் வெடி விபத்தில் உயிர் பலி ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஜனவரியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஆறு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். பிப்ரவயில் மூன்று விபத்துகளில் 12 பேர் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர். மே மாதத்தில் நடந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். இதே போல் தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உள் குத்தகை
இவற்றுக்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலைகள் விதிமீறி இயங்கியதே. ஆலை நடத்துவதற்காக உரிமம் பெற்ற ஒருவர் தனது ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பு. இதுவே விதிமீறல் என்ற நிலையில், குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள் குத்தகைக்கு விடுகிறார். இங்கேதான் கூடுதல் விதிமீறல் துவங்குகிறது. உதாரணமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் குறைந்தது 40 அறைகள் இருக்கும். இந்த 40 அறைகளுமே வெவ்வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடப்படுகிறது. பட்டாசு தயாரிக்கும் போது அறையில் அளவைப் பொறுத்து அதிகபட்சம் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மணி மருந்து அலசும் பணி செய்யும் போது, அறையில் அதிகபட்சம் இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் உள் குத்தகைக்கு எடுக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த விதிமுறைகளை பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை. ஏனெனில் உள்குத்தகைக்கு எடுத்த நபர்கள் உற்பத்தியை பெருக்குவதற்காக அதிக ஆட்களை வைத்து அதிக மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர்.மேலும் ஆலைக்கு உள்ளே மரத்தடியில் பாதுகாப்பின்றி பட்டாசு உற்பத்தி பணி நடக்கிறது. இதுபோல் விதி மீறி உற்பத்தி செய்யப்படும் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி அதிகமாக கிடைப்பதால் விபத்து ஏற்படும் என சில தொழிலாளர்களுக்கு தெரிந்தும் தவறு செய்கின்றனர். தொடரும் விபத்து
நேற்று முன்தினம் விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தனர். இதற்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்பட்டதுதான். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு, உள் குத்தகைக்கு விடக்கூடாது உட்பட 10 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன் என, ஒவ்வொரு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் உறுதிமொழி பிரமாண பத்திரம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் 2024 டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார்.ஆனால் இது குறித்து ஆய்வு செய்யாததால் விபத்து நடைபெறுவது தொடர் கதையாகவே உள்ளது. எனவே பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.