உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தக் கூடாது விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

 உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தக் கூடாது விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விருதுநகர்: ''தமிழகத்தில் தனியார் உரக்கடைகளில் உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தக் கூடாது,'' என, விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் விஜயமுருகன் வலியுறுத்தினார். தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு கடந்த ஜூலை முதல் நிலவுகிறது. ஆடிப்பட்டம், மழைக்கால ஐப்பசி பட்டம் நடவு தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்கள் வாரியாக உரம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் உரக்கடைகளை விட கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகப்படியாக உர இருப்பை ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தனியார் கடைகளில் தான் உரம் இருப்பு அதிகம் உள்ளது. இதனை பயன்படுத்தி உரங்களை வாங்கும் விவசாயிகளிடம் மெக்னீசியம், கால்சியம் கலவை, நானோ யூரியா, இயற்கை உரம் போன்ற இணை பொருட்களை வாங்க கடைகாரர்கள் வற்புறுத்துகின்றனர். இவற்றில் பல பொருட்கள் தரமில்லாததாக உள்ளதுடன், மண் வளத்தையும் கெடுப்பதாக உள்ளது. இணை பொருட்களை விற்க கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில துணைச் செயலாளர் விஜயமுருகன் கூறியதாவது: உரத்தட்டுப்பாடு பிரச்னை 3 மாதங்களாக இருந்து வருகிறது. உரம் வரப்பெற்றால் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். அதை பல மாவட்ட நிர்வாகங்கள் செய்யவில்லை. கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஒரு லோடு யூரியா வாங்கினால் ஒரு லோடுக்கு இணை பொருட்களை வாங்க வற் புறுத்துகின்றனர். டி.ஆர்.ஓ.,க்கள், வேளாண் இணை இயக்குனர்கள், விவசாயிகள், உரக்கடை விற்பனையாளர்களுடன், கூட்டுறவு சங்கங்கள் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் முத்தரப்பு கூட்டம் நடத்தி இணை பொருட்கள் வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி