கவுசிகா நதியில் கருவேலமரங்களை வேரோடு அகற்ற வேண்டும்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
விருதுநகர்: ''விருதுநகர் கவுசிகா நதி புனரமைப்பில் கருவேலமரங்களை வேரோடு அகற்றி முழுமையாக துார்வார வேண்டும் ,''என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன், வேளாண் இணை இயக்குனர் சுமதி, தோட்டக்கலைத் துணை இயக்குனர் சுபா வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: நிறைகுடம், ஸ்ரீவில்லிபுத்துார்: பொன்னாங்கன்னி கண்மாயை துார்வார வேண்டும். சுமதி, இணை இயக்குனர், வேளாண்துறை: 7 குடியிருப்புகள் நீர்நிலை பிடிப்பில் ஆக்கிரமிப்பில் உள்ளது தெரிந்தது. அவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதால் மாற்று வசதி ஏற்பாடு செய்து விட்ட பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கருக்கு விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும். கன்னிசேரியில் தடுப்பணை அமைக்க வேண்டும். குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறோம். 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறேன். எந்த பயனும் இல்லை. மலர்விழி, செயற்பொறியாளர், நீர்வளத்துறை: அரசின் சிறப்பு செயலாளரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காணப்படும். அர்ஜூனன், காவிரி-குண்டாறு விவசாயிகள் பாசன கூட்டமைப்பு: தற்போது விருதுநகரில் கவுசிகா நதியை துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் மரங்கள் வேரோடு அகற்றப்படாமல் உள்ளது. மழை வந்தால் மீண்டும் முளைத்து விடும். நீர்வளத்துறை பணிகளை முறையாக செய்ய வேண்டும். நீர்நிலைகளுக்குள் கழிவுநீர் புகாத வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். துார்வாரும் பணிகளில் வெளிப்படை தன்மை, திட்ட விளக்கம் வேண்டும். சுகபுத்ரா, கலெக்டர்: இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் ஆலோசனை படி செயல்படுத்துவோம். ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு ரிசார்ட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது. இதை அகற்ற வனத்துறை 2023ல் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கியது. அதற்குபின் எந்த நடவடிக்கையும் இல்லை. விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தென்னை பயிருக்கு காப்பீடு வேண்டும். பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகள் கொடுக்க மாநில அரசு ஒத்துக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தக் கூறியுள்ளது. எவ்வளவு இழப்பீடு வரும். சுபாவாசுகி, துணை இயக்குனர், தோட்டக்கலை: கணக்கெடுப்பு எடுத்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். அழகர்சாமி, திருத்தங்கல்: உறிஞ்சிக்குளம் கண்மாயின் வரத்து கால்வாயை நாணல் மூடியுள்ளது.அதை துார்வார வேண்டும். காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வேண்டும். ராம் பாண்டியன், அருப்புக்கோட்டை: செண்பகவல்லி அணையை மீட்க வேண்டும். அதை சரி செய்தால் 62 ஊராட்சிகள் பாசன வசதி பெறும். நாராயணசாமி, தமிழ் விவசாயிகள் சங்கம்: ஆமத்துாரில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதற்கு நன்றி. வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவுத்துறைகளில் விவசாயிகள் தொடர்பாக நிகழ்ச்சி நடத்தினால் கூறுவது கிடையாது. இடைத்தரகர்கள் மூலமாக நடக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். கர்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்: வைத்தியநாதசுவாமி கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 99 ஏக்கர் நிலம் என்ன ஆனது என தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலான தொகை விவசாயிகளிடம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சிகளின் குப்பையை பொது இடங்களில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பஞ்சாலை கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.