உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காட்டுப்பன்றி சுடும் பணியில் விவசாயிகளையும் இணைக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு 

 காட்டுப்பன்றி சுடும் பணியில் விவசாயிகளையும் இணைக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு 

விருதுநகர்: காட்டுப்பன்றிகளை சுடும் பணிகளை தீவிரப்படுத்தி, அதில் விவசாயிகளையும் இணைக்க வேண்டும் என நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சுமதி, நேர்முக உதவியாளர் அம்சவவேணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: கூட்டம் துவங்கும் முன்பே பள்ளியில் வைத்து குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளதாகவும், விவசாயிகளுக்கு வாகன ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதற்கு ஆட்சேபனை தெரிவித்து விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்கள் பழையபடி கலெக்டர் அலுவலகத்திலே நடத்தப்படுவதாக கூறினர். பின் கூட்டத்தில் முக்கிய விவாதமாக காட்டுப்பன்றியால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு பற்றி விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதில் விவசாயிகள் பேசுகையில், “ஒரு இலக்க எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகளை சுட்டு விட்டு கட்டுப்படுத்தி விட்டதாக வனத்துறை கூறக்கூடாது. கண்மாய் புதர்களிலும், நீர்நிலை அருகேயும் அதிகம் உள்ளன. இவற்றால் தினசரி நாங்கள் கண்ணீர் விடுகிறோம். இது உணவு பஞ்சத்திற்கு வழிவகுக்கும். காட்டுப்பன்றி அனைத்து பயிர்களையும் நாசம் செய்து விடுவது விவசாயிகளுக்கு மட்டும் கெட்டதல்ல. எதிர்கால சந்ததிகளுக்கும் கெட்டதே. இதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். காட்டுப்பன்றியை சுடும் குழுவில் விவசாயிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பல வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு காட்டுப்பன்றியை சுடும் அரசாணையின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி தெரியவே இல்லை. இப்படி இருக்கையில் எப்படி இதை செயல்படுத்துவீர்கள். மாவட்ட நிர்வாகம் இதற்கு பதில் கூறி நிரந்தர தீர்வு காண வேண்டும், என்றனர். பல விவசாயிகள் கடைசி வரை வாக்குவாதம் செய்தனர். சுகபுத்ரா, கலெக்டர்: வருவாய்த்துறையில் இருந்து வி.ஏ.ஓ., ஊராட்சித்துறையில் ஊராட்சிச் செயலாளர் ஒருங்கிணைந்து செயல்படுவது உறுதி செய்யப்படும். பன்றியை சுட தீர்மானம் போட்டு விரைந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் செய்யப்படும். முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: வாரம் ஒரு முறை சுட்டால் பலனில்லை. தினசரி ரோந்து செய்து சுட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: பயிர்க்கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் சூழல் உள்ளது. கடனே வேண்டாம் என விவசாயிகள் விட்டுச் செல்லும் நிலை உள்ளது. நகையை பணயமாக கேட்கின்றனர். அலைக்கழிப்பு தொடர்கிறது. கூட்டுறவு சங்க செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றனர். மேலதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: கிராமத்தின் கூட்டுறவு கடன் சங்கங்களில் சீசன் நெல், உளுந்து, தக்கை பூண்டு விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டான்பெட்டில் இணை பொருட்களை வழங்கக் கூடாது. நானோ யூரியா உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்தக் கூடாது. அம்மையப்பன், சேத்துார்: நீர்வளத்துறை வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும், ராம்பாண்டியன், காவிரி, குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு: இந்தாண்டு நரிக்குடி முக்குளம் பகுதியில் பருவம் தவறிய மழையால் நெல் விளைச்சல் இல்லாததால் நெல் விவசாயத்திற்கு இன்சூரன்ஸ் தர மறுப்பதை கண்டித்து நடைபெற இருந்த போராட்டத்தில் திருச்சுழி தாசில்தார், வேளாண் அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சு வார்த்தையில் வறட்சி என்பது அறிவிக்கப்பட்டு, அதற்குரிய நிவாரணத்தை பெற்று தருகிறோம் என கூறி பல மாதங்கள் ஆகிவிட்டது. அடுத்த பருவமழை துவங்கி விட்டது இன்னும் வறட்சிக்கான நிவாரணம் வரவில்லை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாத போக்கு வருத்தம் அளிக்கிறது. மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு மாவட்ட நிர்வாகம் தள்ளிவிட்டுள்ளது ஞானகுரு, மம்சாபுரம்: நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மம்சாபுரம் அத்திதுண்டு பேயனாற்றின் பிரிவு கால்வாய் வேப்பங்குளம், ரெங்கப்பநாயக்கர் குளம் நீர் செல்லும் பிரதான கால்வாய் கரை ஓரம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். விலங்கன் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஆதவன் வடிவேல், விருதுநகர்: செங்குன்றாபுரத்தில் பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே உரம் தருகின்றனர். சிறிய விவசாயிகளை கண்டுக்கொள்வதில்லை. தமிழ்ச்செல்வன், சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தில் உலர்க்களம் வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்