அரசு மருத்துவமனைகளில் சி.டி.,ஸ்கேன் எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கான கட்டணம் இனி ஆன்லைனில் செலுத்தலாம்
விருதுநகர்: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கான கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரிகரித்து வருகிறது. இங்கு சி.டி., ஸ்கேன் எடுக்க ஒரு பகுதிக்கு ரூ. 500 என பரிசோதனை கட்டணம் ரொக்கமாக மட்டுமே வசூலிக்கப்பட்டது.மேலும் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காகவும், உள், வெளி நோயாளிகளாக வருபவர்களுக்கும் சி.டி. ஸ்கேன் ரூ. 500, எம்.ஆர்.ஐ., ரூ. 2500 ரொக்கமாக வசூலிக்கப்பட்டது. இதில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எடுக்க முன்கூட்டியே பதிவு செய்து அப்ரூவல் கிடைத்த பின்பே பரிசோதனை எடுப்பர். ஆனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கையில் பணம் வைத்திருப்பதில்லை. மாறாக அலைபேசியில் ஆன்லைன் வர்த்தகம், ஏ.டி.எம்., கார்டு வைத்துள்ளனர். பரிசோதனை கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுவதால் மக்கள் ஏ.டி.எம்., மையங்களை தேடும் நிலை தொடர்ந்து நீடித்தது. கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.தற்போது அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, அரசு தாலுகா மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக தனி க்யூ-ஆர் கோடு ஸ்கேனர் ஸ்டிக்கர்கள் கட்டணம் செலுத்தும் இடத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்த சுவைப்பிங் மிஷின்களும் உள்ளது. இதனால் பரிசோதனைக்கு வருபவர்களின் சிரமம் குறைந்து எளிதாக கட்டணங்களை செலுத்த முடியும்.