| ADDED : நவ 17, 2025 01:53 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ''தமிழகத்தில் சிங்கம் - புலி கூட்டணியாக அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உள்ளது. சிங்கமாக அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, புலியாக பா.ஜ., உள்ளனர்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் பயிற்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அவர் பேசியதாவது: மத்தியில் தெய்வீகமான, பலமான பாரதத்தை உருவாக்கக்கூடிய ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அற்புதமாக நடந்து வருகிறது. ஒரு சாமானியனாக பிறந்த மோடி உலக நாடுகளையே அச்சுறுத்தும் அளவிற்கு, அமெரிக்காவே பயப்படும் அளவிற்கு ஒரு வலிமையான பாரதத்தை உருவாக்கிய பிரதமராக இருக்கிறார். தமிழகத்தின் தங்க மகனாக பழனிசாமி ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தெய்வீக பக்தி, தேச பக்தி உடைய அவரது ஆட்சியில் தமிழகம் பொற்காலமாக விளங்கியது. ஆனால் தற்போதைய தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, தொழில் வரி என பல்வேறு வரிகள் விதிப்பதுடன், விலைவாசி உயர்ந்து விட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க., ஆட்சி மீது கடுமையான அதிருப்தி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க., அமைச்சர்கள் மத்தியில் ஒரு கலக்கம் வந்துவிட்டது. கட்சியினர் மத்தியில் சோர்வும் வந்துவிட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டை நோக்கி எத்தனை அரசியல் கட்சி தலைவர்கள் வரப்போகின்றனர் என்பதை ஜனவரி மாதம் பாருங்கள். பீஹாரை போல் தமிழகத்திலும் நம் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 2026 மே மாதம் முதல்வராக பழனிசாமி பதவி ஏற்பார். இவ்வாறு பேசினார்.