சாத்துார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குப்பை; நோயாளிகள் அவதி
சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குப்பை கொட்டப்படுவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் வெங்கடாசலபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கே.கே நகரில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் கே.கே நகர் மற்றும் ஹவுசிங் போர்டு காலனியில் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இங்கு பிளாஸ்டிக் கழிவுகளும் கட்டட கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு அதில் தீ வைத்து எரிப்பதால் மருத்துவமனையில் உள்புற நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சுவாச நோய் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ரோட்டில் இதுபோன்று கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. மக்கள், நோயாளிகள் நலன் காக்கப்பட ஊராட்சி நிர்வாகம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.