ஊர்க்காவல் படையினருக்கு வேலை நாள், சம்பளம் போதவில்லை! வாழ்வாதாரம் பாதிப்பதால் வெளியேறும் அவலம்
அருப்புக்கோட்டை; மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்களுக்கு வேலை நாள் அதிகம் கிடைக்காமலும், சம்பளம் குறைவாகவே வழங்கப்படுவதாலும், இது போதாமல் வாழ்வாதாரம் பாதிப்பை தவிர்க்க பணியில் இருந்து வெளியேறுகின்றனர். போலீசாருடன் பல்வேறு பணிகளில் இணைந்து செயல்படும் விதமாக 1962ல் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு என தனி சீருடை உள்ளது. போலீஸ் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் அந்தப் பணி கிடைக்காத சூழலில் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிபுரிகின்றனர். தமிழகத்தில் 16 ஆயிரத்து 500 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர். போலீசாரை தேர்ந்தெடுக்கும் அனைத்து தகுதிகளும் இவர்களுக்கும் உண்டு.இவர்கள் போலீசாருடன் இணைந்து டிராபிக் பணி செய்வது, கோயில் திருவிழாக்கள், பொது கூட்டங்கள், வி.ஐ.பி. பாதுகாப்புகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.விருதுநகர் மாவட்டத்தில் 275 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை, திருச்சுழியில் 50 ஊர்க்காவலர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் பாதி பேர் பெண்கள் உள்ளனர். ஊர் காவல் படையினருக்கு விருதுநகர் மாவட்டத்தில் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அருகில் உள்ள துாத்துக்குடி மாவட்டத்தில் 25 நாட்கள் வரை பணி வழங்கப்படுவதாக வேதனையுடன் கூறுகின்றனர். விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 5 நாட்கள் மட்டும் பணி உள்ள நிலையில், கிடைக்கும் ஊதியத்தை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.ஆர்வத்துடன் இந்தப் படையில் சேர்ந்தவர்கள் போதுமான ஊதியம் கிடைக்காததால் வருத்தத்துடன் பணியிலிருந்து விலகி வேறு பணிக்கு சென்று விட்டனர். ஊர்க்காவல் படையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நாட்களும், ஊதியமும் அதிகமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் எந்தவித நடவடிக்கை இல்லை ஊர்க்காவல் படையினர் உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. மக்களுக்கு தொண்டாற்றும் பணி செய்து வரும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதத்தில் 20 நாட்கள் வரை பணியையும், 560 ரூபாயிலிருந்து ஊதியத்தை ரூ.ஆயிரம் ஆக வழங்க வேண்டும் என, ஊர் காவல் படையினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஊர்க்காவல் படையினரின் நலனை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு உரிய ஊதியத்தை உயர்த்தியும், மாதம் குறைந்தபட்சம் 20 நாட்களாவது பணியையும் வழங்க வேண்டும்.