| ADDED : பிப் 04, 2024 04:16 AM
சாத்துார் : சாத்துார் தெருக்களில் நாள்தோறும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தென் வடல் புதுத்தெரு, நாடார் கீழத்தெரு ,பாரதியார் தெரு ,வடக்கு ரதவீதி ,தெற்கு ரதவீதி, கீழரத வீதி, மாரியம்மன் கோயில் தெரு ,பிள்ளையார் கோயில் தெரு, முருகன் கோயில் தெரு, அக்ரகார தெரு பகுதிகள் 20 அடி முதல் 40 அடி பாதையாக இருந்தன.இந்த தெருக்களில் கனரக வாகனங்கள் சென்று வந்த நிலையில் தற்போது சிறிய ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத வகையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து பாதை குறுகிய நிலையில் உள்ளது.இந்தப் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிறியது முதல் பெரிய கடைகள் போடப்பட்டு உள்ளன. மேலும் இந்த தெருக்களில் பல வீடுகள் தெருவை ஆக்கிரமித்து படிக்கட்டு, கார் செட்டுகளும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர கால நேரங்களில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் தெருக்களுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.பெரும் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் ஆக்கிரமிப்புகள் காரணமாக மீட்பு வாகனங்கள் தெருக்களுக்குள் வர முடியாத நிலை உள்ளது.இதன் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்படுவதோடு உயிர் பலிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி அதிகாரிகள், நகர அமைப்பு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.