உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கால்நடை மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்துவது அவசியம்; நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் கூடுதல் கவனம் தேவை

கால்நடை மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்துவது அவசியம்; நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் கூடுதல் கவனம் தேவை

மாவட்டத்தில் கிராமப்புறங்களில் தொழில் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளது. ஊரகப் பகுதிகளான நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் எந்த வளர்ச்சியும் இல்லை. வருமானத்திற்கு அப்பகுதியில் கால்நடைகளை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கால்நடை துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. பெரும்பாலும் பராமரிக்கப்படாமல் தரிசு நிலங்களாக கிடக்கின்றன. அதில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. கண்டும் காணாமல் விட்டு விட்டதால் தனி நபர்கள் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேய்ச்சல் நிலங்களை பண்படுத்தி கால்நடை தீவனங்களை விளைவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பசுமை தமிழகம் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. பல லட்சம் செலவு செய்து மரக்கன்றுகள் நட்டன. சரிவர பராமரிக்காமல் வீணாகி வருகிறது. அதற்கு பதிலாக மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்தி இருந்தால் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பயன்பெற்று இருப்பர். மாவட்ட நிர்வாகம் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க, தீவன உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளாக இருக்கும் நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம் அப்பகுதியில் கால்நடை தீவன உற்பத்தியை பெருக்க வேண்டும். கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்து பிற பகுதிகளுக்கும் சப்ளை செய்ய முடியும். விவசாயிகளின் விளை நிலங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பயிர் வளர்ப்பு இயக்க திட்டத்தின் கீழ் 90 ஏக்கரில் கால்நடை தீவனங்கள் மானியத்தில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, எச்சரிக்கை பலகை வைத்து கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !