தொழிலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனம்: பதவி முடிவதால் ஆர்வமின்மை
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளின் பதவிக்காலம் 2025 ஜன.5ல் முடிவடைய உள்ளது. ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சியாகவும், நகராட்சிகளை மாநகராட்சியாகவும் மாற்றி அமைக்கவும், ஊராட்சிகளை மறுவறை செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதால் தற்போது உடனடியாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லாத நிலை காணப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடைசி கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவடைந்து வருகிறது. இதனையடுத்து கடந்த மாதம் முதல் கவுன்சிலர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அலுவலகங்களுக்கு வருவதை குறைத்து கொண்டு தங்களது சொந்த தொழிலில் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர்.மாவட்டத்தில் பல ஒன்றிய குழு தலைவர்கள் விவசாயம், ரியல் எஸ்டேட், பட்டாசு, ஜவுளி, உட்பட பல்வேறு தொழில்களில் செய்து வருவதால், தினசரி அதனுடைய பணிகளில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊராட்சிகளில் அதன் செயலாளர்களும் ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ளனர்.உள்ளாட்சி அமைப்புகள் மறுவரை செய்து 2025 கடைசியில் தேர்தல் நடத்தபடுமா, 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள் காத்திருக்கின்றனர்.