| ADDED : ஜன 08, 2024 05:27 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரங்களில் மேடு, பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது.வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி வேகமாக செல்வதற்கும் விபத்துக்கள் இன்றி பாதுகாப்பாக பயணம் செய்வதற்கும் தான் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடி வரை உள்ள இந்த நான்கு வழி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.துாத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால், அதிக அளவில் கனரக வாகனங்கள் பல டன்கள் எடையுடன் செல்லும். ரோடுகளை அவ்வப்போது, பராமரிப்பு பணி செய்கின்ற போது, ரோட்டின் இரு ஓரங்களை மட்டும் மண் போட்டு சமன் செய்வது இல்லை.ரோடு போடும் போது, உயரமாகி கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றாற் போல் ஓரங்களை சமன் செய்வது இல்லை. ரோடு ஓரங்களில் தான் டூவீலர்கள் செல்ல வேண்டும். முந்தி செல்லும் வாகனங்களுக்கு வழிவிட ரோடு ஓரங்களில் நிறுத்த முடியவில்லை. மேடும், பள்ளமுமாக இருப்பதால் தடுமாறி விழ வேண்டியுள்ளது.அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வழியாக செல்லும் நான்குவழி சாலையின் ஓரங்கள் மேடும், பள்ளமுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. இந்த பகுதிகளை மண் போட்டு சமன் செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.