உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம்; பணிகள் தீவிரப்படுத்தப்படுமா? தேவையான நிதி ஒதுக்கவும் மக்கள் எதிர்பார்ப்பு

மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம்; பணிகள் தீவிரப்படுத்தப்படுமா? தேவையான நிதி ஒதுக்கவும் மக்கள் எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை : கிடப்பில் போடப்பட்ட மதுரை -- துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கி பணிகளை முடுக்கி விட வேண்டும் என மூன்று மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை உள்ளிட்ட வடபகுதியிலிருந்து துாத்துக்குடிக்கு ரயில்கள் தற்போது மதுரை, விருதுநகர், மணியாச்சி, மீளவிட்டான் வழியாக இயக்கப்படுகின்றன. இப்பாதை 153 கி.மீ., துாரம் உள்ளது. பயண நேரமும் ஒரு மணி நேரம் கூடுதலாக உள்ளது. இவ்வழித்தடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படும் போது தாமதம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதுார், விளாத்திகுளம், மேல மருதுார், மீளவிட்டான் வழியாக துாத்துக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க 2000ல் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தால் பயண நேரமும், துாரமும் குறையும்.பல ஆண்டுகளாக இத்திட்ட பணிகள் நடக்கின்றன. தற்போது துாத்துக்குடி, மீளவிட்டான், மேல மருதுார் வரை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. விளாத்திகுளம் பகுதியில் நிலம் எடுப்பு பணி நடக்கிறது.ஆனால் மற்ற பகுதிகளில் இத்திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் நடக்கவில்லை. ரயில்வே நிர்வாகம் போதுமான நிதியை ஒதுக்காததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2024 -- 25 ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின் 2024 பட்ஜெட்டில் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.அருப்புக்கோட்டை வட்டார ரயில் பயணிப்போர் சங்க செயலர் சரவணன் கூறியதாவது: மதுரை -- துாத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இத்திட்டம் செயல்பட்டால் இப்பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தொழிற்சாலைகள் அதிகரிக்கும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாற்றுப்பாதை கிடைப்பதுடன் கூடுதல் ரயில்களை இயக்க முடியும். மதுரை, விருதுநகர், துாத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை