அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ செலவுக்கான இன்ஸ்சூரன்ஸ்
விருதுநகர்: அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அடுத்த மாதத்தில் இருந்து மருத்துவ செலவுக்கான இன்ஸ்சூரன்ஸ் நிறுத்தப்படுகிறது. இதனால் ஓய்வூதியத்தில் பெரும் பகுதியை மருத்துவத்திற்கு செலவிட வேண்டிய நிலை இருப்பதால் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ செலவுக்கான இன்ஸ்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுக்கான பிடித்தம் செய்து இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதனால் மருத்துவ பரிசோதனை, சிகிச்சைக்கு ஆகும் செலவு இன்ஸ்சூரன்ஸ் மூலம் பெறப்படுகிறது. ஆனால் அரசு போக்குவரத்து ஊழியராக இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அடுத்தமாதத்தில் இருந்து மருத்துவ செலவுக்கான பிடித்தம் நிறுத்தப்பட்டு இன்ஸ்சுரன்ஸ் இல்லாமல் போகிறது. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண்புரை உள்பட பல்வேறு பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவ செலவுக்கு ஓய்வூதியத்தின் பெரும் பகுதி செலவிட வேண்டிய நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரிகள், தனியார் அமைப்புகள் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களுக்கு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலையே நீடிக்கிறது. எனவே அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து மருத்துவ செலவுக்கான இன்ஸ்சுரன்ஸ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.