உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் ஜவுளி பூங்காவிற்கு நில எடுப்பு செய்த பகுதியில் கபளீகரமாகும் மரங்கள் இரவோடு இரவாக வெட்டி கடத்தும் மர்மநபர்கள்

விருதுநகர் ஜவுளி பூங்காவிற்கு நில எடுப்பு செய்த பகுதியில் கபளீகரமாகும் மரங்கள் இரவோடு இரவாக வெட்டி கடத்தும் மர்மநபர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் அமையவுள்ள ஜவுளி பூங்காவிற்கு நில எடுப்பு செய்த இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இதன் உள்ளே உள்ள மரங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி கடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது. இதற்கான இ.குமாரலிங்கபுரம் வரை ரோடு விரிவாக்க பணி, திட்ட அலுவலகம் கட்டும்பணி வேகம் எடுத்து நடந்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டர் அகலத்திற்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இ.குமாரலிங்கபுரத்தில் அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்ட பட்டாசு ஆலையில் தற்போது உற்பத்தி எதுவும் இல்லாமல் வெறும் அறைகள் மட்டுமே உள்ளன. வேலிகள் இல்லாததால் இங்கு இரவோடு இரவாக அனுமதியின்றி 10க்கும் மேற்பட்ட மரங்களை நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர். மேலும் இங்கு மது குடித்து விட்டு செல்வது போன்ற சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே அனுமதியின்றி மரங்கள் வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு கையகப்படுத்திய இடங்களை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை