மேலும் செய்திகள்
சூப்பர் ரிப்போர்டர் விசிட் செய்தி
12-Oct-2024
திருச்சுழி,: பஸ் வசதி இல்லை, இடியும்நிலையில் மேல் நிலை குடிநீர் தொட்டி, செயல்படாத சுகாதார வளாகம், திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள், கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பெரிய சோழாண்டி கிராமம். விருதுநகர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம். ஊரின் முக்கிய பிரச்னையே பஸ்கள் வருவது இல்லை. 2 கி.மீ., தூரம் நடந்து சென்று வாகைகுளத்தில் மக்கள் பஸ் ஏறுகின்றனர். மழை காலங்களில் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது.நடுநிலை மற்றும் உயர்நிலை கல்வி படிக்கும் மாணவர்கள் பஸ் வசதி இல்லாமல் ஆட்டோவில் தான் செல்கின்றனர். ஊரின் மெயின் ரோடு அருகில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. அருகில் உள்ள பள்ளிக்கு ரோடு வழியாகத் தான் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். தொட்டியை இடிக்க சொல்லி பலமுறை கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.ஊரில் பொதுக்கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. குடிநீர் முறையாக வருவது இல்லை. ஊராட்சி மயானத்திற்கு செல்லும் பாதை மோசமாக உள்ளது. மின் விளக்கு, தண்ணீர் வசதி இல்லை. தெருக்களில் பேவர் பிளாக் கல் பதிக்க வேண்டும். வாறுகால்கள் சேதமடைந்து உள்ளன. இங்குள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றி மழை நீர் வரத்து ஓடைகளை சரி செய்து கண்மாய்க்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் வசதி வேண்டும்
செந்துார்பாண்டி, விவசாயி: எங்கள் கிராமத்திற்கு பஸ் வருவது இல்லை. இதனால் வெளியூர் செல்வதற்கு சிரமமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட 2 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏற வேண்டும். பெண்கள் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். வாடகை ஆட்டோவில் தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். மாவட்டத்தின் கடைகோடி கிராமமாக இருப்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. விழும் நிலையில் மேல்நிலை தொட்டி
முருகவேல், தொழிலாளி: பெரிய சோழாண்டி கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டின் அருகில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி உள்ளது. இது பயன்பாடு இன்றி இருக்கிறது. தொட்டியின் பல பகுதிகள் சேதம் அடைந்து அதன் கால்கள் விரிசல் அடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ரோடு வழியாகத்தான் மக்கள் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லுகின்றனர். தொட்டியை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மேல்நிலைத் தொட்டியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லை
பாலமுருகன், தனியார் ஊழியர்: எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் வந்து பல மாதங்கள் ஆகி விட்டது. குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். ஊராட்சி பொது கழிப்பறை கட்டப்பட்டு தண்ணீர் வசதி இன்றி காட்சி பொருளாக உள்ளது. மயானத்திற்கு பாதை வசதி இல்லை. தெருக்களில் மின்விளக்கு வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யவில்லை.
12-Oct-2024