வடிகால் ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத அதிகாரிகள்-: சங்கடத்தில் விவசாயிகள்
ராஜபாளையம் : நகர் பகுதியை ஒட்டியுள்ள கண்மாய்கள் ஊருணிகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் வடிகால்கள் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விவசாயிகள் பல்வேறு சிக்கலுக்கு உள்ளாகின்றனர். வேகமான வளர்ச்சிக்கு ஏற்ப நகர் மயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு சுலப இலக்காக நகரை ஒட்டி உள்ள பாசன பரப்பு விவசாய நன்செய் நிலங்கள் இரையாகின்றன. ரோட்டை ஒட்டியுள்ள நிலங்களில் அதிகாரிகளின் துணையுடன் கடைகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படுகிறது. இதில் வரத்து கால்வாய்களுக்கு வழியின்றி மூடி விடுகின்றனர். இவற்றால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பாசன நீர் கடந்து செல்ல வழியின்றியும், பாசனப்பகுதி உபரி நீர்களும் மழைக்காலங்களில் வழிந்து செல்லும் அதிகப்படியான நீரும் தேக்கமடைந்து பயிர்கள் அழுகி சேதமாகி பெரும்பாலானோர் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.ராஜபாளையம், சேத்துார், தேவதானம்,சத்திரப்பட்டி, முகவூர் உள்ளிட்ட கண்மாய் பகுதி ஒட்டிய நிலங்களுக்கு இதே நிலை காணப்படுகிறது. ரியல் எஸ்டேட் அதிபர்களின் ஆசை வார்த்தைகளால் பலரும் ஓடைகள், நீர் வரத்து கால்வாய்களை மறித்து கட்டடங்கள் கட்டி வருகின்றனர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் துணை போவதால் விவசாயிகள் செய்வதறியாது சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆரம்பத்திலேயே கண்காணித்து இச்செயல்களை தடுப்பதுடன் பாசன பகுதிகளை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.