உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். விருதுநகர் * பஞ்சுப்பேட்டை ரெங்கநாத சுவாமி கோயிலில் அதிகாலை 5:05 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நாராயணா கோஷத்துடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பரமபத வாசல் வழியே கடந்து சென்றார். காலை 6:30 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி நகர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். * ரயில்வே பீடர் ரோடு ராமர் கோயிலில் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு கருட வாகனத்தில் ராமர், சேஷ வாகனத்தில் சீனிவாச பெருமாள் வீதியுலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு சீனிவாச பெருமாள் -- பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்றனர். *அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் வரதராஜ பெருமாள் சன்னதியில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். * பாலையம்பட்டி வேணுகோபாலநாதர் சுவாமி கோயில், ராமானுஜபுரம் சென்னகேசவ பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் திரளாக கூடி நின்றனர். அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. *சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சயன சேவை நடந்தது. பின்னர் 7:45 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கினர். பின்னர் நான்கு மாட வீதி வழியாக வலம் வந்த சுவாமி யானை மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு மேல் கருட சேவை நடந்தது. இதில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தார். சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி