| ADDED : டிச 27, 2025 04:29 AM
விருதுநகர்: மதுரை 'தேஜஸ்', திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை 'வந்தே பாரத்' உள்ளிட்ட முக்கிய ரயில்களில் 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி.,(ஒரு முறை கடவுச்சொல்) சரிபார்ப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் வசதிக்காக ரயில் புறப்படும் முந்தைய நாள் காலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆதார் இணைக்கப்பட்டவர்கள் மட்டும் தட்கலில் முன்பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது. ஜூலை 15 முதல் ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி., அனுப்பி சரிபார்க்கப்பட்டவர்கள் மட்டுமே டிக்கெட் பெறும் முறை படிப்படியாக நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆன்லைன் வாயிலாகவும், கவுன்டர்களில் தட்கல் முன்பதிவு செய்பவர்களுக்கும் பொருந்தும். இதன்மூலம் பயணம் மேற்கொள்ள விரும்பும் உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் 35 ரயில்களுக்கு இந்நடை முறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, மதுரை --- சென்னை எழும்பூர் -- மதுரை தேஜஸ் (22671/22672), திருநெல்வேலி -- சென்னை எழும்பூர் - -திருநெல்வேலி வந்தே பாரத் (20665/20666), நாகர்கோவில் -- சென்னை எழும்பூர் -- நாகர்கோவில் வந்தே பாரத் (20627/20628), கோவை -- சென்னை சென்ட்ரல் -- கோவை வந்தே பாரத் (20643/20644), கோவை -- சென்னை சென்ட்ரல் -- கோவை ஷதாப்தி' (12243/12244), மதுரை -- பெங்களூரு கன்டோன்மென்ட் -- மதுரை வந்தே பாரத் (20671/20672), கோவை -- பெங்களூரு கன்டோன்மென்ட் -- கோவை வந்தே பாரத் (20641/20642) ஆகிய முக்கிய ரயில்கள் அடங்கும்.