மண் ரோடால் திண்டாட்டம், கண்மாயில் சாயக்கழிவு அவதியில் லீலாவதி நகர் மக்கள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியான லீலாவதி நகரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை விருதுநகர் ரோடு திருநகரம் பகுதியில் அமைந்துள்ளது லீலாவதி நகர். புறநகர் பகுதியான இது உருவாகி 15 ஆண்டுகள் மேல் ஆகிறது. நெசவாளர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள இப்பகுதியில் எங்கும் வாறுகால், ரோடு இல்லை. மண் ரோடாக தான் உள்ளது. மேடும் பள்ளமுமாக இருப்பதால் ரோட்டில் நடக்க மக்கள் சிரமப்படுகின்றனர்.மழைக்காலமானால் சேறும் சகதியுமாக ரோடு மாறிவிடுகிறது. கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக இருக்கிறது. போதுமான தெரு விளக்குகள் இல்லை. நகராட்சி குடிநீர் இந்த பகுதியில் வருவது இல்லை. குடிநீர் பகிர்மான குழாய் போடப்படாததால் வீடுகளில் குடிநீர் இணைப்புகள் இல்லை குடிநீரை குடம் 15 ரூபாய் கொடுத்து தான் தனியார் இடத்தில் வாங்க வேண்டியுள்ளதாக பெண்கள் கூறுகின்றனர். வாங்குகின்ற கூலியில் பாதி தண்ணீருக்கு செலவாகி விடுவதாக நெசவாளர்கள் புலம்புகின்றனர்.புழக்கத்திற்கும் பொது அடி குழாய்கள் இல்லை. நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகிறது. குழந்தைகள் வெளியில் சென்று விளையாட பயப்படுகின்றனர். நகராட்சி மூலம் பொது கழிப்பறைகளும் கட்டித் தரப்படவில்லை. இந்தப் பகுதி வழியாக செல்லும் ஓடை சுகாதார கேடாக உள்ளது ஓடையில் சாயக் கழிவு நீர் விடப்படுகிறது.நகராட்சி குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீரை காசு கொடுத்து தான் வாங்குகிறோம். நகர் உருவாகி பல ஆண்டுகள் ஆனபோதிலும் குடிநீர் வசதியை நகராட்சி ஏற்படுத்தி தரவில்லை. புழக்கத்திற்கும் பொது அடிகுழாய்கள் இல்லை. தண்ணீருக்காக நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் பகுதியில் நகராட்சி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அங்காள ஈஸ்வரி, குடும்ப தலைவி.
குடிநீரின்றி சிரமம்
தெருக்களில் வாறுகால் இல்லை. வீடுகளில் இருந்து விடப்படும் கழிவு நீர் தெருக்களில் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. நகராட்சி வரிகளை அனைத்தையும் நாங்கள் கட்டுகிறோம். ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி மெத்தனம் காட்டுகிறது.- தங்கமணி, நெசவாளர்.லீலாவதி நகரில் உள்ள நெருக்களில் ரோடு போடப்படவில்லை. குண்டும், குழியுமாக இருப்பதால் நடக்க முடியவில்லை. இரவு நேரங்களில் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். எங்களுக்கு ரோடு, வாறுகால் அமைத்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மனோகரன், நெசவாளர்.-