இருளில் தெருக்கள், ரோடு, குடிநீர் தொட்டி சேதம் அவதியில் விருதுநகர் 116வது காலனி மக்கள்
விருதுநகர்: ரோடு, வாறுகால், மேல்நிலைக்குடிநீர் தொட்டி சேதம் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் அருகே உள்ள 116வது காலனி மக்கள்.விருதுநகர் அருகே 1960ல் மத்திய அரசு நிதியில் தொழிலாளர்களுக்காக 116 வீடுகள் கட்டப்பட்டு 116வது காலனி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தொழிலாளர்கள் யாரும் வீடுகளை வாங்க முன்வராததால் மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு விற்பனை செய்யவும், அதை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி வீடுகளுக்கு விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.1973 முதல் தற்போது வரை குடியிருக்கும் பயனாளிகளிடம் வீடுகளை விற்பனை செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வீடுகளை பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டதால் இடிந்து விழும் நிலையில் இருந்த 15 வீடுகளை வீட்டு வசதி வாரியம் இடித்துள்ளது.மேலும் காலனி பகுதியில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடுகள் சேதமாகி பள்ளங்களால் நிறைந்துள்ளது. வாறுகால்கள் பல பகுதிகளில் சிதிலமடைந்துள்ளது. மேல்நிலைக் குடிநீர் தொட்டியும் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. தெருக்களில் போதிய அளவு மின் விளக்குகள் இல்லை.116வது காலனியில் உள்ள வீடுகளை பயனாளிகளுக்கு கொடுக்காமல் 40 ஆண்டுகளாக இழுத்து அடித்து வருகின்றனர். அமைச்சர்களிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் வீடுகளை கிரையம் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -சக்கணன், குடியிருப்போர்.
கிரையம் செய்து கொடுங்கள்
இப்பகுதி வீடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. குடியிருப்போருக்கு கொடுக்காததால் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள பிரச்னைகளை கலைந்து பயனாளிகளுக்கு வீட்டை கொடுத்துசேதமானதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -பிரகாஷ், குடியிருப்போர்.மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. முறையாக பராமரிக்காததால் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு புதிய மேல்நிலைக் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.- -செல்வ ரத்தினம், குடியிருப்போர்.