மம்சாரபுத்திற்கு செல்ல மறுக்கும் தனியார் பஸ்கள் ஆட்டோக்களில் மக்கள் ஆபத்து பயணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மம்சாபுரத்திற்கு ஒரு தனியார் பஸ் மட்டும் செல்லும் நிலையில், 3 தனியார் பஸ்கள் செல்ல மறுப்பதால் மக்கள், ஆட்டோக்களில் ஆபத்து பயணம் செய்யும் அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அனைத்து தனியார் பஸ்களும் மம்சாபுரம் வந்து செல்வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென மம்சாபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மம்சாபுரம் வழியாக 4 தனியார் பஸ்கள் இயங்கி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் காலை, மாலை வேலை நேரங்களில் பஸ்ஸிற்காக காத்திருக்கின்றனர். அவசரத்திற்காக மினிபஸ், ஆட்டோகளில் பயணித்து வந்தனர். சமீபத்தில் மம்சாபுரத்தில் மினி பஸ் கவிழ்ந்து 4 பேர் பலியான சம்பவத்தையடுத்து அனைத்து அரசு, தனியார் பஸ்கள் முறையாக இயங்குவதற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையத்தில் இருந்து புறப்படும் அரசு, தனியார் டவுன் பஸ்களின் நேர கால அட்டவணை மக்கள் பார்வைக்கு மம்சா புரத்தில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வைத்தனர். நான்கு தனியார் பஸ்கள் இயங்க வேண்டிய நிலையில் ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்குவதால், தற்போது மம்சாபுரம் மக்கள் ஆட்டோ களில் ஆபத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை ஆய்வாளர் பூர்ணலதா கூறியதாவது: தற்போது மம்சாபுரத்திற்கு ஒரு தனியார் பஸ் மட்டும் இயங்கி வருகிறது. 3 தனியார் பஸ்கள் செல்ல மறுப்பதை எங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். இது குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.